மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் திறந்திருந்தன மறியலில் ஈடுபட்ட 51 பேர் கைது + "||" + Perambalur district 75 percent of the shops were open Engaged in picket 51 arrested

பெரம்பலூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் திறந்திருந்தன மறியலில் ஈடுபட்ட 51 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் திறந்திருந்தன மறியலில் ஈடுபட்ட 51 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் திறந்திருந்தன. மறியலில் ஈடுபட்ட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. மேலும் தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்றது.


பெரம்பலூரில் நேற்று காலை வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் அக்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், போஸ்ட் ஆபீஸ் தெரு, கடைவீதி, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பெரம்பலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திறந்திருந்த துணிக்கடைகள், பாத்திரக்கடை, பழக்கடைகள், காய்கறி கடைகள், பெட்டி கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட கடைகளை அடைக்க, அதன் உரிமையாளர்களிடம் வலியுறுத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து உரிமையாளர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். ஆனால் சில மணி நேரம் கழித்து வழக்கம்போல் கடைகளை திறந்து உரிமையாளர்கள் வியாபாரம் செய்ய தொடங்கினர். மேலும் பல்வேறு இடங்களில் கடைகளின் உரிமையாளர்கள் பாதியளவு ஷட்டர் கதவுகளை திறந்து வியாபாரம் செய்ததை காணமுடிந்தது. பெரம்பலூர்-திருச்சி சாலையில் உள்ள கடைகளில் சில கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பால் விற்பனை நிலையம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள் ஆகியவை வழக்கம்போல் திறந்திருந்தன.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாக மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே செல்லமுடியாமல் அணி வகுத்து நின்றன. அப்போது மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் போலீசார் மறியலை கைவிடுமாறும், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என்றும் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் மற்றும் 3 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

அடுத்த சில மணிநேரங்களில் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் மதன் உள்ளிட்ட அக்கட்சியினரும், தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட அக்கட்சியினரும் கலந்து கொண்டனர்.

பள்ளிகளில் நேற்று காலாண்டு தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோக்கள் காலை 9 மணி வரை வழக்கம் போல் ஓடின. ஆனால் அதன்பிறகு தொழிற்சங்களை சேர்ந்த நிர்வாகிகள் சாலையில் ஓடிய ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை கீழே இறக்கி விடுமாறு, அதன் டிரைவரிடம் எச்சரித்தனர். இதையடுத்து பயணிகளை கீழே இறக்கி விட்டனர். அதில் இருந்து இறங்கிய பள்ளி மாணவி ஒருவர் தேர்வு என்பதால் பள்ளிக்கு எப்படி செல்வது என்று யோசித்தவாறு தவித்து நின்றார். பின்னர் அரசு பஸ்சில் ஏறி சென்றார். தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஷேர் ஆட்டோக்களை இயக்காமல், சாலையோரங்களில் நிறுத்தியிருந்தனர். மேலும் பலர் தங்களது வீட்டின் முன்பு ஷேர் ஆட்டோக்களை நிறுத்தியிருந்தனர். ஒரு சில லாரிகள் மட்டும் ஓடவில்லை. அதே நேரத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

குன்னம், மங்களமேடு, பாடாலூர், வாலிகண்டபுரம், லெப்பைக்குடிக்காடு, அகரம்சீகூர் ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகள் மட்டும் அடைத்திருந்தனர். ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. வேப்பந்தட்டை தாலுகாவில் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள், வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில் மறியலில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நடத்திய முழுஅடைப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 75 சதவீத கடைகள் வழக்கம்போல் திறந்திருந்ததாலும், பஸ்கள் ஓடியதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றே கூறலாம். மாலை 3 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.