டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 10 Sep 2018 10:45 PM GMT (Updated: 10 Sep 2018 7:53 PM GMT)

பெருங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் புதுக்கோட்டை நகர நிலவரி திட்டத்தின் சார்பில் 13 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சேர்ந்து பயிற்சி பெற்று 2018-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப்- 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு போன்றவற்றை கலெக்டர் கணேஷ் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கூட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வேங்கூர், பெருங்காடு, ஆதிதிராவிடர் காலனி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், நாங்கள் வசிக்கும் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெருங்காடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த கடை திறக்கப்பட்டால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைவார்கள். எனவே பெருங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

பொன்னமராவதி தாலுகா மறவாமதுரை பகுதியை சேர்ந்த நித்யா என்பவர் கொடுத்த மனுவில், நான் பிளஸ்-2 வரை படித்து உள்ளேன். அதை முறையாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளேன். எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் கடந்த ஆண்டு நடைபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணலில் கலந்து கொண்டேன். எனவே எனக்கு காலியாக உள்ள அங்கன்வாடியில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Next Story