திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் கத்தியால் குத்திக்கொலை


திருப்பூரில் பரபரப்பு சம்பவம்: அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 11 Sept 2018 5:30 AM IST (Updated: 11 Sept 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் ஸ்ரீநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 35). இவர் திருப்பூர் 28–வது வார்டு அ.தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். மேலும், திருப்பூர் சின்னபொம்மநாயக்கன் பாளையத்தில் ஓட்டலும் நடத்தி வந்தார். இவரது மனைவி கல்பனா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் வாங்குபவர்களுக்கு இளங்கோ பணம் கொடுத்து, வாங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக பணம் பெற்றிருந்தவர்களிடம் பணம் வசூல் செய்வதற்காக, தனது ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அங்கு பணம் பெற்றவர்களுக்கும், இளங்கோவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே இளங்கோ தனது நண்பரான ஸ்ரீநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு, திருநீலகண்டபுரத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் காளியப்பனும் அங்கு சென்றுள்ளார். அப்போதும், பணம் பெற்றவர்களுக்கும், இளங்கோவிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவரின் மோட்டார்சைக்கிள் சாவியை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அவருக்கு முன்பாக காளியப்பன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் திருநீலகண்டபுரம் வடக்கு வீதி பகுதியில் மாலை 5.30 மணி அளவில் வந்த போது, எதிரே ஒரு மோட்டார்சைக்கிளில் 3 பேர் வந்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில், எதிரே வந்த மோட்டார்சைக்கிளில் 3–வதாக இருந்த நபர் கத்தியால், காளியப்பனை குத்த முயன்றார். அவர் உடனே சுதாரித்துக்கொண்டு விலகினார். இதனால் அவருக்கு மார்பு பகுதியில் லேசான கத்திக்குத்து விழுந்தது. அவருக்கு பின்னால் இளங்கோ வந்த ஸ்கூட்டரை வழிமறித்து தடுத்து நிறுத்திய அந்த கும்பல் நடுரோட்டில் வைத்து இளங்கோவின் முகத்தில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இளங்கோ, காளியப்பனின் கூச்சல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் பலத்த காயமடைந்த இளங்கோவை மீட்டு, அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதன் பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இளங்கோ பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இளங்கோவின் உறவினர்கள் பலரும் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர். பொதுமக்கள் பலரும் அந்த பகுதியில் குவிந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பணத்தை பெற்றவர்கள் முன்விரோதம் காரணமாக இந்த கொலையை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கும்பல் வந்த மோட்டார் சைக்கிளின் எண்களை காளியப்பன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடுரோட்டில் அ.தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளங்கோ கத்தியால் குத்தப்பட்டதும் பலத்த காயத்துடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது காளியப்பன் உள்பட அங்கு வந்த அவரது நண்பர்கள் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ மற்றும் அந்த வழியாக வந்த கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் உதவிக்கு முன்வராமல் சென்றுவிட்டனர். அவசரத்திற்கு உதவி செய்ய ஆட்டோ கூட வரவில்லை எனக்கூறி அவர்கள் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க செய்தது.


Next Story