மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 11 Sept 2018 5:15 AM IST (Updated: 11 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே மீன் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ஜெகன் (வயது 35), பிரபல ரவுடி. இவர் மீது புதுவை மாநிலத்தில் கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

நேற்று மதியம் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்கிற சேட்டு உளவாய்க்கால் பகுதியில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் ஜெகன், மீன் வாங்குவதற்காக பேரம் பேசினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஜெகன் மீது வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் செய்தார். ஆனால் நேற்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனால் ராஜேந்திரன் கொடுத்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்ததை அறிந்த ஜெகன், நேற்று மாலை அவரது வீட்டுக்கு சென்று தகராறு செய்து வீட்டை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெகன் மீது ராஜேந்திரனின் மகன் நவீன் கோபமடைந்தார். ஏற்கனவே இவருக்கும், ஜெகனுக்கும் மதுகுடிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் கண்டமங்கலத்தை அடுத்த சின்ன அமணங்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் பெண்ணை பார்ப்பதற்காக ஜெகன் சென்றிருப்பது நவீனுக்கு தெரியவந்தது. இதையடுத்து நவீன் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அப்போது அங்குள்ள கோவிலின் முன்பு ஜெகன் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் திடீரென்று மின்தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்திக்கொண்ட நவீன் தனது நண்பருடன் சேர்ந்து ஜெகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தலை, முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். ஜெகன் இறந்ததை உறுதிசெய்துவிட்டு, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதை பார்த்த கிராம மக்கள் கண்டமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் (பொறுப்பு), சப்–இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கோபி, மோகனமுத்து, செந்தில்குமார் மற்றும் போலீசார் அமணங்குப்பம் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு பிணமாக கிடந்த ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த படுகொலை தொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நவீன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story