பஸ்- ஆட்டோக்கள் ஓடவில்லை; புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 342 பேர் கைது


பஸ்- ஆட்டோக்கள் ஓடவில்லை; புதுவையில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, 342 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2018 5:00 AM IST (Updated: 11 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

அதன்படி நேற்று காலை 6 மணிக்கு முழுஅடைப்பு போராட்டம் தொடங்கியது. புதுவையில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், குபேர் பஜார், நெல்லித்தோப்பு மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் எதுவும் திறக்கப்படவில்லை. மீன் மார்க்கெட் முற்றிலுமாக இயங்கவில்லை.

நேரு வீதி, காந்தி சாலை, அண்ணாசாலை, மிஷன் வீதி, 100 அடி ரோடு, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

புதுவையில் அதிகாலையில் புதுச்சேரி, தமிழக அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் சென்னை உள்பட பல்வேறு ஊர்களுக்கு வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செல்வோர் இந்த பஸ்களில் ஏறிச் சென்றனர். பலர் ரெயிலில் பயணம் செய்தனர். இதன்பின் காலை முதல் மாலை வரை புதுவை அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. கிராமப்புற மக்களின் போக்குவரத்து தேவையை தனியார் பஸ்களே நிறைவேற்றி வந்தன. இந்த பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

காலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வந்தனர். இதற்கிடையே புதுவையில் இருந்து காரைக்கால் சென்ற தமிழக அரசு பஸ்சை சிலர் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே கல்வீசி தாக்கினார்கள். இதைத்தொடர்ந்து அரசு பஸ்களும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் புதுவை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்களைப்போல் டெம்போக்களும் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. அதில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தன. அரசு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனால் குறைவான எண்ணிக்கை யிலேயே மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.

முழுஅடைப்பின்போது வன்முறை சம்பவங்கள் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. டி.ஐ.ஜி. சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சந்திப்புகளில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

முழு அடைப்பு போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு சில பஸ்கள் இயக்கப்பட்டன.

நேற்று காலை காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு தமிழக அரசுக்கு சொந்தமான பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ் நெல்லித்தோப்பு சிக்னல் அருகே வந்த போது ஒரு கும்பல் கல்வீசி தாக்கியதில் அந்த பஸ்சின் பின் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓட்டம்பிடித்தனர். பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து புகார் செய்யப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார் பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவர்களுடன் புதுவை முத்தியால்பேட்டை வழியாக சென்றது. அப்போது அந்த பகுதியில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த சிலர் கல் வீசி தாக்கியதில் அந்த பஸ்சின் கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரியில் முழு அடைப்பின்போது சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு, மறியல் என ஆங்காங்கே பல இடங்களில் போராட்டங் களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மொத்தம் 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. ஆட்டோ, வேன், லாரிகள், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் ஓடின. அதையும் நிறுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியதால் நிறுத்தப்பட்டது. தனியார் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு பள்ளிகள், கல்லூரிகள் இயங்கின.

முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவ கிராமங்களைச்சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடிதுறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனையையும் நிறுத்தினர்.

காலை 10.30 மணி அளவில் தி.மு.க.வினர், முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில், மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று மறியலில் ஈடுபட்டனர். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, த.மு.மு.க., விடுதலைச் சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பஸ் நிலையம் எதிரே தனித்தனியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய மறியலில் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ்கள் ஓடாததாலும், கடைகள் திறக்கப்படாததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேநேரத்தில் வன்முறையின்றி முழுஅடைப்பு போராட்டம் நடந்து முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டன. பஸ்கள் மற்றும் டெம்போக்கள் இயக்கப்பட்டன.

Next Story