மாவட்ட செய்திகள்

வைகை அணையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு + "||" + More than 2 thousand cubic feet of water from Vaigai dam

வைகை அணையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

வைகை அணையில் இருந்து கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி,


ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழ்கிறது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணையின் முழு கொள்ளளவாக 69 அடி கணக்கிடப்பட்டு வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளளவில் நிலை நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு அந்த 2 மாவட்டங்களுக்கும் குடிநீர் தேவைக்காக 18 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்பேரில் வைகை அணையில் இருந்து நேற்று மாலை 6 மணி முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே கால்வாய் மூலம் 1,900 கனஅடி தண்ணீர் மற்றும் மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி, 58-ம் கால்வாய் பகுதிக்கு வினாடிக்கு 70 கனஅடி என மொத்தம் 2 ஆயிரத்து 30 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பதை சேர்த்து வினாடிக்கு 4 ஆயிரத்து 30 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது. வைகை அணையில் இருந்து முதற்கட்டமாக, சிவகங்கை மாவட்டத்துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.

3 நாட்களுக்கு பிறகு ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் சேர்த்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 18 நாட்களில் 1,560 மில்லியன் கனஅடி தண்ணீர் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.