திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


திருத்துறைப்பூண்டியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 10 Sep 2018 9:28 PM GMT (Updated: 10 Sep 2018 9:28 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் எதிர்காலத்தில் வாகன போக்குவரத்து நெரிசலை தடுக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலான அகல ரெயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் 2-வது ரெயில் பாதையான சென்னை-ராமேஸ்வரம் வரையிலான இந்த பாதையில் திருவாரூரில் இருந்து காரைக்குடி வரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், பாண்டி, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல், திருவாரூர் வரையிலான 80 கி.மீட்டர் தூரம் உள்ள ரெயில் பாதை கடந்த 8 ஆண்டுகளாக அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாதையை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருத்துறைப்பூண்டியை இணைக்கும் அகல ரெயில் பாதை பணியும் நடைபெற்று வருகிறது. அதேபோல பாரம்பரிய ரெயில் பாதையான திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி வரையிலான அகல ரெயில் பாதை பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னை-காரைக்குடி, சென்னை-ராமேஸ்வரம், சென்னை-திருவனந்தபுரம், சென்னை-தூத்துக்குடி, திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம்-அகஸ்தியம்பள்ளி, வேளாங்கண்ணி- காரைக்குடி, வேளாங்கண்ணி-மதுரை, வேளாங்கண்ணி-திருவனந்தபுரம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் விளையும் நெல் மற்றும் விவசாய பொருட்கள், வேதாரண்யம் பகுதியில் விளையும் பூ வகைகள், காய்கறிகள், புகழ் பெற்ற வேதாரண்யம் உப்பு உள்ளிட்டவைகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் மூலம் எடுத்து செல்வதால் திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட் எந்த நேரமும் மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதனால் வேதாரண்யம், கோடியக்கரை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், வாய்மேடு, துளசியாப்பட்டினம், தலைஞாயிறு, ஓரடியம்புலம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட ஊர்களை சேர்ந்த பொது மக்கள் சாலை மார்க்கமாக வாகனங்களில் மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். அப்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதாகோவில், நாகூர் தர்கா போன்ற ஆலயங்களுக்கு செல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங் களில் இருந்து வருபவர் கள் சாலை மார்க்கமாக வந்தால் திருத்துறைப்பூண்டி ரெயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே எதிர்காலத்தில் கடும் போக்குவரத்து நெரிசலை திருத்துறைப்பூண்டி சந்திக்கும் முன் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி ரெயில்வே மேம்பாலம் அமைத்தால் நீடாமங்கலத்தில் அடிக்கடி ரெயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போல இங்கு ஏற்படாமல் தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

திருத்துறைப்பூண்டியில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story