பெலகாவி அருகே கோலாப்பூர்-ஐதராபாத் ரெயிலில் பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது


பெலகாவி அருகே கோலாப்பூர்-ஐதராபாத் ரெயிலில் பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 11 Sept 2018 3:12 AM IST (Updated: 11 Sept 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே கோலாப்பூர்-ஐதராபாத் ரெயிலில் நேற்று பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெங்களூரு,

மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து நேற்று காலை 7.30 மணியளவில் ஐதராபாத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் குடச்சி ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை சுமார் 9.40 மணியளவில் வந்தது. இந்த வேளையில் ரெயிலில் பயணித்த ஒரு கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

இதுபற்றி உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயிலில் பிரசவ வலி தாங்காமல் அந்த பெண் அலறி துடித்து கொண்டிருந்தார். இந்த வேளையில் ராயபாக் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. ஆம்புலன்ஸ் வாகனமும் ரெயில் நிலையத்துக்கு வந்தது.

ஆண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் இருந்து இறங்கி வந்த ஊழியர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை பார்வையிட்டனர். அப்போது, அவருடைய நிலையை அறிந்த ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் பெண் பயணிகளின் உதவியுடன் ரெயிலிலேயே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதனால், அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் தாய் மற்றும் சேயை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயபாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தாய் மற்றும் குழந்தையின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது, அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பதும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

30 நிமிடம் தாமதம்

இதுபற்றி விசாரித்தபோது குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் பெயர் எல்லவ்வா மகேஷ் காயகவாட் (வயது 23) என்பதும், அவர் ராயபாக் அருகே உள்ள சாகுபார்க் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், கோலாப்பூர் அருகே குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வந்த எல்லவ்வா மகேஷ் காயகவாட் பிரசவத்துக்காக ரெயிலில் வந்தபோது குழந்தை பிறந்ததும் தெரியவந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்ததால் பஸ் கிடைக்காமல் அவர்கள் ரெயில் பயணத்தை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ரெயிலில் பிரசவம் பார்க்கப்பட்டதால் ராயபாக் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட 30 நிமிடங்கள் தாமதமாக அந்த ரெயில் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

Next Story