மாவட்ட செய்திகள்

களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி + "||" + Tiger census work in the Kalakkadu-Mundundurai Forest Secretariat

களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி

களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி
களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
களக்காடு, 


களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அப்பர் கோதையாறு, களக்காடு, திருக்குறுங்குடி வன சரகங்களில் புலிகள் மற்றும் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி வரும் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் கல்லூரி மாணவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள், வனத்துறை ஊழியர்கள் என 100 பேர் கலந்து கொள்கின்றனர்.

அப்பர் கோதையாறு வனச்சரகத்தில் 5 குழுவினரும், களக்காடு மற்றும் திருக்குறுங்குடி வனச்சரகத்தில் தலா 8 குழுவினரும் என மொத்தம் 21 குழுவினர் வனப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதல் 3 நாட்களில் புலி, சிறுத்தை உள்பட பிற மாமிச உண்ணிகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் குளம்பினங்கள் குறித்தும், கடைசி 2 நாட்களில் இவற்றை பதிவு செய்யும் பணியும் நடக்கிறது. இந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு நேற்று களக்காடு தலையணையில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமை தாங்கி பேசினார். வன சரக அலுவலர்கள் புகழேந்தி, கமலக்கண்ணன், பாலாஜி மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கணக்கெடுப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் அனைவருக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்கள் வனப்பகுதிக்கு சென்றனர்.

இதையடுத்து திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அம்பை கோட்டத்தில் பாபநாசம் வனச்சரகத்தில் 4, அம்பை வனச்சரகத்தில் 6, முண்டந்துறை வனச்சரகத்தில் 13, கடையம் வனச்சரகத்தில் 6 என மொத்தம் 29 பீட்டுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பீட்டிலும் 2 வன அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் 3 பேரும் என 5 பேர் இந்த பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இந்த பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பாபநாசம் செக்போஸ்ட் வனப்பயிற்சி அரங்கில் வனச்சரகர் பாரத் தலைமையில் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. வனவர் மோகன், முருகசாமி, மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் வினோத், வனக்காப்பாளர் சுந்தரேசன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரி, அம்பை கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் கோவை, திருச்சியை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வனப்பகுதிக்குள் செல்லும் ஒவ்வொரு குழுவிற்கும் அரிசி, காய்கறிகள், முதலுதவி மருந்துகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்பட்டன.