‘தமிழகத்தில் சுடுகாட்டில் கூட லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது’ சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா குற்றச்சாட்டு


‘தமிழகத்தில் சுடுகாட்டில் கூட லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது’ சேலத்தில் நடிகை ஸ்ரீபிரியா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Sep 2018 11:16 PM GMT (Updated: 10 Sep 2018 11:16 PM GMT)

‘தமிழகத்தில் சுடுகாட்டில் கூட லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது’ என்று சேலத்தில் நடந்த விழாவில் நடிகை ஸ்ரீபிரியா கூறினார்.

சேலம்,

மக்கள் நீதி மய்யத்தின் சேலம் மாவட்ட அலுவலகம் சேலம் மணல்மார்க்கெட் டி.எம்.எஸ். பஸ் நிறுத்தம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

இதையடுத்து அவர் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி வைத்து விழாவில் பேசும்போது கூறியதாவது:-

மற்ற கட்சிகளில் எல்லாம் உறுப்பினராக சேர லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கும். ஆனால் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினராக சேர அப்படி ஏதும் கிடையாது. தமிழகத்தில் தந்தைக்கு மகன் என்று சான்று வழங்க லஞ்சம் கேட்கிறார்கள், மேலும் ஒருவர் உலகை விட்டு சென்ற பிறகும் சுடுகாட்டிலும் கூட லஞ்சம் கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

சுதந்திரமாக வாழ மாற்றம் தேவை. தேர்தலின் போது சிந்தித்து நம்மவர் கமல்ஹாசனுக்கு வாக்களித்து அவரை முதல்-அமைச்சராக்கினால் மாற்றம் ஏற்படுவது உறுதி. பெண்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:- மக்கள் நீதி மய்யத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளார்கள் என்று ஒரு அமைச்சர் கூறி உள்ளார். ஆனால், பெண்களுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு இல்லை. அவர்களின் சுதந்திரம் பறிபோய் விட்டது போல் தெரிகிறது.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் முடிவு தெரிவிக்கும் வரை நாங்கள் பதில் கூற முடியாது. சோபியா விவகாரத்தில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டதாக நினைக்கிறோம். அவருடைய பாஸ்போர்ட் முடக்கம் மாணவியின் எதிர்காலத்தை பாதிக்கும். இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் அவசரப்பட்டிருக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாரதி கிருஷ்ணகுமார், தங்கவேலு, மாவட்ட பொறுப்பாளர்கள் டாக்டர் சித்தார்த்தன், நடராஜன், பிரசன்ன சித்தார்த்தன், பிரபு மணிகண்டன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story