மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் பஸ்-ரெயில் மறியல் 565 பேர் கைது + "||" + In the Tanjore district In 13 places Bus-rail stir 565 people arrested

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் பஸ்-ரெயில் மறியல் 565 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் பஸ்-ரெயில் மறியல் 565 பேர் கைது
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 13 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 565 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு பஸ் மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி பஸ், ரெயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலும் பஸ், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி.வரதராஜன், தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு மாநிலக்குழு உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலைச்சிறுத்தைககள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், வணிகர் சங்கத்தினர் என 38 பெண்கள் உள்பட 125 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், பொதுச்செயலாளர் ஜெயக்குமார், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், தி.மு.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், நகர செயலாளர் நீலமேகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், வணிகர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் பகுதியில் நேற்று காலை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பின்னர் 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் கும்பகோணம் நகரில் திறக்கப்பட்ட கடைகளை மூடச்சொல்லி வலியுறுத் தினர். இதையடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் சி.ஐ.டி.யூ சார்பில் நேற்று புதிய பஸ் நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன் தலைமை தாங்கினார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் தலைமை அஞ்சலக சாலை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பட்டுக்கோட்டையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பட்டுக்கோட்டை நகரில் சின்னையா தெரு, தலையாரி தெரு, அறந்தாங்கி ரோடு, தஞ்சாவூர் ரோடு, பெரிய கடைத்தெரு, பெரிய தெரு உள்பட அனைத்து இடங்களிலும் டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள், மருந்துக்கடைகள், காய்கறிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, அம்மாப்பேட்டை, திருவையாறு, பாபநாசம், செங்கிப்பட்டி உள்பட மாவட்டங்களில் 12 இடங்களில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 38 பெண்கள் உள்பட 548 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சையை அடுத்த பூதலூரில் சோழன்எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்ட 1 பெண் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் பஸ், ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக மொத்தம் 39 பெண்கள் உள்பட 565 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மதுரையில் இருந்து சிதம்பரத்துக்கு அரசு பஸ் நேற்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பஸ் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கீழஒரத்தூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பஸ் மீது கல்வீசினர். பின்னர் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.