முழு அடைப்புக்கு ஆதரவு: சின்னமுட்டம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
முழு அடைப்பு போராட்டத்தையொட்டி சின்னமுட்டம், குளச்சல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அருகே சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இங்குள்ள விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்று விட்டு இரவு கரை திரும்புவார்கள். இந்தநிலையில் நேற்று முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இந்த விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். நேற்று நடைபெற்ற போராட்டத்தையொட்டி குளச்சல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மேலும், ஏற்கனவே கடலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் இறக்கப்படவில்லை.
இதனால், துறைமுகத்தில் உள்ள ஏலக்கூடம் வெறிச்சோடி காணப்பட்டது. குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story