குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்


குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
x
தினத்தந்தி 11 Sept 2018 5:15 AM IST (Updated: 11 Sept 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில், குடிநீர் கேட்டு 2 இடங்களில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சி 27-வது வார்டு ஜோதிநகர் பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு 15 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறியும், குடிநீர் கேட்டும் ஆத்தூர் காமராஜனார் ரோட்டில் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார், இங்கு சாலை மறியல் செய்யக்கூடாது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டு தீர்வு காணுங்கள் எனக்கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல 19-வது வார்டு லீபஜார் பகுதி மக்கள் பெண்கள் காலிக்குடங்களுடன் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் நீண்ட நாட்களாக வரவில்லை எனக்கூறி சேலம் - கடலூர் சாலை லீபஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி அலுவலர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறோம்.தற்போது கலைந்து செல்லுங்கள் என சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சாலைமறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.


Next Story