ஆம்பூரில் 20 ஆண்டு கால கோரிக்கை புறக்கணிப்பு: ஆனைமடுகு தடுப்பணையை தூர்வாரிய பொதுமக்கள்


ஆம்பூரில் 20 ஆண்டு கால கோரிக்கை புறக்கணிப்பு: ஆனைமடுகு தடுப்பணையை தூர்வாரிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Sept 2018 8:07 AM IST (Updated: 11 Sept 2018 8:07 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் 20 ஆண்டுகளாக அரசு கண்டு கொள்ளாததால் ஆனைமடுகு தடுப்பணையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தூர்வாரினர்.

ஆம்பூர், 

வேலூர் மாரட்டம் ஆம்பூர் அருகே கம்பிக்கொல்லை பகுதியில் ஆனைமடுகு தடுப்பணை அமைந்துள்ளது. நாயக்கனேரி மலைப்பகுதியில் மழை பெய்யும் போது மழைநீர் கரைபுரண்டு ஓடி வந்து இந்த தடுப்பணையில் சேகரிக்கப்படும். இந்த தடுப்பணை நிரம்பி ஆம்பூர் கானாற்று வழியாக உபரிநீர் பாலாற்றில் கலக்கும். இந்த தடுப்பணையால் ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடிந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயர்வதால் விவசாயிகளும் பெரும் பயன் அடைந்து வந்தனர்.

ஆனைமடுகு தடுப்பணை இருபுறமும் மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக தடுப்பணை நிரம்பினால் கடல் போல் காட்சி அளிக்கும்.

இந்த தடுப்பணையை தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகள் இங்குதான் கரைக்கப்படுகிறது. இதனால் தடுப்பணையின் ஆழம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

இந்த தடுப்பணையை தூர்வாரி, ஆழத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்ட கலெக்டர் முதல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அனைவரும் தடுப்பணையை பார்வையிட்டு தூர்வார நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 20 ஆண்டுகாலமாக மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது தடுப்பணை நீரின்றி வறண்டு காட்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் தடுப்பணையை தூர்வாரினால் மழைக்காலத்தில் பெருமளவு நீரை சேகரிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.

இந்தநிலையில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால், தடுப்பணையை தங்களது சொந்த செலவில் தூர்வார பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தடுப்பணையில் தூர்வாரும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என கட்சி பாகுபாடின்றி அனைவரும் இதில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு செய்ய வேண்டிய பணிகளை அப்பகுதி மக்கள் முன்நின்று செய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகமும் அதில் பங்குகொண்டு தடுப்பணையை முழுமையாக தூர்வாரவும், தடுப்பணையின் உயரத்தை உயர்த்தி, அதிக அளவு தண்ணீரை தேக்கி வைக்கவும், பொழுதுபோக்கு அம்சம் இல்லாத ஆம்பூரில் தடுப்பணை நிரம்பும் போது படகு சவாரி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story