புற்றுநோய் ஆய்வில் புதிய முன்னேற்றம்


புற்றுநோய் ஆய்வில் புதிய முன்னேற்றம்
x
தினத்தந்தி 11 Sept 2018 12:36 PM IST (Updated: 11 Sept 2018 12:36 PM IST)
t-max-icont-min-icon

நாம் வாழும் இந்த உலகம் ஆபத்துகள் நிறைந்தது. நாம் செல்லும் பாதையில் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை சமாளிக்க நமக்கு உடல் வலிமையும், நம்மைத் தற்காத்துக் கொள்ள உதவும் ஆயுதங்கள் அல்லது சண்டை செய்ய உதவும் பிரத்யேக பயிற்சிகள் இல்லையென்றால் நம் வாழ்க்கைப் பயணத்தை நாம் தொடர முடியாது.

அது சரி, எதிரிகளை நம்மால் பார்க்க முடிந்தால், அவற்றை சண்டையிட்டு வென்று விடலாம். ஆனால், நம் எதிரிகள் நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால், எப்படி சண்டையிடுவது? நம் கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளை, தினசரி 24 மணி நேரமும் நமக்குத் தெரியாமலேயே நாம் எதிர்கொள்ளத்தான் செய்கிறோம்.

நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள்தான் அவை. அடிப்படையில், அவற்றை நாம் எதிர்கொள்வதில்லை, மாறாக நமக்காக, நம் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் உள்ள பல்வேறு வகையான உயிரணுக்கள் நுண்ணுயிரிகளை எதிர்கொண்டு அழிக்கின்றன. நம்மை நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்துப் பாதுகாக்க, நம் உடல் முழுக்க உள்ள தோல் பகுதியில் உள்ள ரத்த ஓட்டத்தில் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் எப்போதும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன.

இவற்றில் கிருமி அல்லது நுண்ணுயிரிகளை அப்படியே விழுங்கிவிடும் வெள்ளை ரத்த உயிரணுக்களுள் ஒன்றான மேக்ரோபேஜ் (Macrophages) தொடங்கி ஆன்டிபாடி (antibody) எனும் புரதங்கள் மூலமாக நுண்ணுயிரிகளை அழிக்க உதவும் பல்வேறு வகையான பி செல்கள் (B cells) மற்றும் நுண்ணுயிரிகளை சூழ்ந்து ரசாயனங்கள் மூலம் அழிக்கும் டி செல்கள் (T cells) வரை, வித விதமான திறன்கள் கொண்ட பல பிரத்யேக உயிரணுக்களைக் கொண்டது நம் நோய் எதிர்ப்பு மண்டலம்.

ஆனால், பல நூற்றாண்டு காலமாக நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்த பின்னரும், நம் நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்கும் விதம் தொடர்பான பல அறிவியல் உண்மைகள் இன்னும் புரியாத புதிர்களாகவும், மர்மங்களாகவுமே தொடர்கின்றன. அதனால்தான், மனிதர்களை லட்சக்கணக்கில் அழித்துவரும் புற்று நோயும், எய்ட்ஸ் போன்ற பல்வேறு உயிர்கொல்லி நோய்களும் நோய் எதிர்ப்பு இன்றி, மருந்துகள், சிகிச்சைகள் இன்றி உயிர்களைக் கொன்றுவருகின்றன.

மேக்ரோபேஜ் உயிரணுக்கள் நோய் எதிர்ப்புப் பணியில் ஈடு படும்போது அவற்றின் மேற்பரப்பில் ‘கூடாரம்’ (tent-pole ruffles) போன்ற வடிவங்கள் தோன்றுவதை படம்பிடித்து அசத்தியிருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜென்னி ஸ்டோவ் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்.

அழியும் நிலையில் உள்ள உயிரணுக்கள், உயிரணு கழிவுகள், நுண்ணுயிரிகள், புற்றணுக்கள் மற்றும் உடலுக்குள் நுழையும் அந்நிய பொருட்கள் என அனைத்தையும் கண்டறிந்து விழுங்கி விடும் திறன் கொண்ட மேக்ரோபேஜ் உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள கூடார அமைப்புகள், உடல் திரவங்களில் கிருமிகள் அல்லது ஆபத்துகள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதனை செய்ய உதவுகின்றன என்று கூறப்படுகிறது.

அடிப்படையில் கூடாரங்களைத் தாங்கி நிற்கும் கம்பங்கள் போல இருக்கும் இந்த புதிய வடிவங்கள், (ruffle sheeth extensions எனப்படும்) ஒருவகையான சவ்வினால் மூடப்பட்டு இருப்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கூடார கம்ப அமைப்பின் காரணமாகவே, மேக்ரோபேஜ்களால் அதிக அளவு உடல் திரவங்களை சேகரிக்கவும், பின்னர் அவற்றில் நுண்ணுயிரிகள் அல்லது அந்நிய பொருட்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்கவும் உதவும் மேக்ரோபைனோசைட்டோசிஸ் (macropinocytosis) எனும் செயலை மேற்கொள்ள முடிகிறது என்கின்றனர் ஸ்டோவ்வின் ஆய்வுக்குழுவினர்.

மேலும், லாட்டீஸ் லைட் ஷீட் மைக்ரோஸ்கோபி (lattice light sheet microscopy) எனும் மிகவும் நவீன நுண்ணோக்கி தொழில்நுட்பத்தின் உதவியுடனேயே ‘கூடார கம்பங்கள்’ மிகவும் துல்லியமான முப்பரிமாண படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கியமான செயல்பாடுகளுள் ஒன்றான மேக்ரோபைனோசைட்டோசிஸ் தொடர்பான துல்லியமான தகவல்களை படம்பிடித்துள்ள இந்த நுண்ணோக்கி தொழில்நுட்பமானது, புற்றுநோய் உயிரணுக்களின் சாதூரியம் தொடர்பான தகவல்களையும் நாம் கண்டறிய உதவக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

உதாரணமாக, மேக்ரோபேஜ்கள் போலவே, புற்றணுக்களும் மேக்ரோபைனோசைட்டோசிஸ் மூலமாக ஊட்டச்சத்துகள் நிறைந்த திரவங்களை கண்டறிந்து தாம் உயிர்வாழவும், இரட்டிப்படையவும் அவற்றை பயன்படுத்திக்கொள்கின்றன என்று கூறப்படுகிறது. அதற்காக, கூடார கம்ப அமைப்புகளை புற்றணுக்களும் பயன்படுத்துகின்றன என்றும், புற்றணுக்கள்
கூடார கம்ப அமைப்புகளை பயன்படுத்தும் விதத்தை நன்கு புரிந்து கொண்டால் அவற்றை தாக்கி அழிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்து புற்றணுக்களை அழித்துவிடலாம் என்றும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

மேலும், லாட்டீஸ் லைட் ஷீட் மைக்ரோஸ்கோபி தொழில்நுட்பத்தின் உதவியுடன், நோய்கள் மூலமாக உயிரணுக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும், மருந்துகள் உயிரணுக்களை எப்படி பாதிக்கின்றன என்றும் முப்பரிமாண அளவில் கண்டறிந்து, அதனடிப்படையில் புதிய சிகிச்சைகளை உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார் ஆய்வாளர் ஜென்னி ஸ்டோவ்.

- தொகுப்பு: ஹரிநாராயணன்

Next Story