கல்குவாரிகளை மூடக்கோரி 15 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு


கல்குவாரிகளை மூடக்கோரி 15 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 9:45 PM GMT (Updated: 11 Sep 2018 6:26 PM GMT)

ஓமலூர் அருகே கல் குவாரிகளை மூடக்கோரி 15 டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி பகுதியில் உம்பிளிக்கம்பட்டி, வேப்பிலை ஆகிய ஊராட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் உம்பிளிக்கம்பட்டியில் மணகுண்டா மலையையொட்டி உள்ள கரட்டு பகுதிகளில் 2 தனியார் கல்குவாரிகள் உள்ளன.

இந்த கல்குவாரிகளில் இருந்து வெளியேறும் துகள்கள் விவசாய நிலங்களில் படிவதால், பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் போது கற்கள் சிதறி வீடுகள் மீது விழுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். மேலும் ஓடை வாய்க்காலை ஆக்கிரமித்து ஜல்லிகளை ஏற்றி செல்ல பாதை அமைத்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதால் கல்குவாரிகளை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கல்குவாரிகளை மூடக்கோரி நேற்று காலை 8.45 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கற்களை ஏற்றிச்செல்ல வந்த 15 டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர். அவர்கள் சாலையின் நடுவே கற்களை வைத்து லாரிகள் செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அந்த லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இது பற்றி தகவல் அறிந்ததும் காடையாம்பட்டி வருவாய் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர், தீவட்டிப்பட்டி போலீசார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் செயல்படும் கல்குவாரிகளின் உரிமம் 10 நாட்களுக்கு முன்பே காலாவதியாகி விட்டது. ஆனாலும் அனுமதியின்றி தொடர்ந்து கற்களை உடைத்து வருகிறார்கள். எனவே அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை மூடினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கல்குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காலை 11 மணி அளவில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story