மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 12 Sept 2018 4:00 AM IST (Updated: 12 Sept 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரவள மையங்களிலும் பிரத்யேக முறையில் சிகிச்சை மேற்கொள்ளும் பணி நடைபெறுகிறது. இதில் மனவளர்ச்சி குறைவுடைய, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட , செவித்திறன் குறைவுடைய, பார்வை குறைவுடைய, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குழந்தை பிறந்தது முதல் 6 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் உபகரண கருவிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவை அதிகரிக்கும் வகையிலான பொருட்கள், காது கேளாத மற்றும் வாய்பேசாத குழந்தைகளுக்கு விளக்க படங்கள் மற்றும் பொருட்கள் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கும் சாதனங்கள், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான முடநீக்கு சாதனங்கள், மதிப்பீடு செய்யும் வகையில் நடமாடும் சிகிச்சை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் வழங்கப்படும்

ஆரம்ப கால பயிற்சி மையங்களுக்கு வர இயலாத மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இடங்களுக்கு சென்று அவர்களை மதிப்பீடு செய்வதற்கும், பயிற்சிகள் வழங்கிடவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எல்லாபுரம், பெரியபாளையத்திலும், 20-ந்தேதி (வியாழக்கிழமை) கடம்பத்தூரிலும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பூந்தமல்லியிலும், 26-ந்தேதி (புதன்கிழமை) பொன்னேரியிலும், 27-ந்தேதி வியாழக்கிழமை திருவாலங்காட்டிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையங்களில் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அதே போன்று 3-10-2018 அன்று திருத்தணியிலும், 4-10-2018 அன்று வில்லிவாக்கத்திலும், 9-10-2018 அன்று ஆர்.கே.பேட்டையிலும், 16-10-2018 அன்று பூண்டியிலும், 18-10-2018 அன்று திருவாலங்காட்டிலும், 23-10-2018 அன்று புழல் பகுதியிலும், 24-10-2018 பொன்னேரியிலும், 25-10-2018 மற்றும் 30-10-2018 சோழவரத்திலும் நடமாடும் வாகனம் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story