தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்


தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:30 AM IST (Updated: 12 Sept 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார். ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு, 


ஆண்டு தோறும் ஜனவரி மாதம் 12-ந் தேதி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் தேசிய அளவிலான இளைஞர் விழாவில் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுபெற விண்ணப்பிப்பவர்கள் 15 வயதில் இருந்து 29 வயதுக்குள் இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன்பு விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க கூடாது.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் விண்ணப்பிக்க, சங்க பதிவு சட்டத்தின்படி தொண்டு நிறுவனம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டு இருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடன் தொண்டு பணிகள் செய்திருக்க கூடாது. குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டு ஆற்றிய நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்க முடியாது. இதற்கு முன்பு விருது பெற்ற தொண்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்க முடியாது. சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம், செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்களை இணைக்க வேண்டும்.

2016-2017-ம் ஆண்டு சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட தேசிய இளைஞர் விருதுக்கு வருகிற 15-ந் தேதிக்குள் https://in-n-ov-ate.my-g-ov.in/nya என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி (பொறுப்பு) நோயிலின் ஜானை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார். 

Next Story