பள்ளியில் படிக்கும்போதே சைக்கிள் செயினுடன் திரிந்தவர்: ராணுவ வீரரின் மகன் ரவுடியான கதை


பள்ளியில் படிக்கும்போதே சைக்கிள் செயினுடன் திரிந்தவர்: ராணுவ வீரரின் மகன் ரவுடியான கதை
x
தினத்தந்தி 12 Sept 2018 3:00 AM IST (Updated: 12 Sept 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராணுவ வீரரின் மகனாக பள்ளிக்கு சென்றவர் பிற்காலத்தில் ரவுடியாக மாறியுள்ளார். இதுகுறித்த விவரங்கள் வருமாறு:-

தேனி,

சிறைத்துறை, போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவர், முன்னாள் ராணுவ வீரர்.

நாகராஜனுக்கு உடன் பிறந்த 2 அக்காள்களும், ஒரு அண்ணனும் உள்ளனர். அவருடைய அண்ணன் ரமேஷ், தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, அவரும் விடுதலை செய்யப்பட்டார்.

‘புல்லட்’ நாகராஜனின் மனைவி சுசீலா (50). இவர், சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மனைவியும், மகளும் சென்னையில் வசிப்பதாக கூறப்படுகிறது. நாகராஜன், ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதால் ‘புல்லட்’ நாகராஜன் என்ற பட்டப்பெயரில் அழைக்கப்பட்டார்.

இவர் பட்டப்படிப்பு படித்துள்ளதாக மதுரை மத்திய சிறையில் உள்ள அவரை பற்றிய குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. வடுகப்பட்டி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த போது இடுப்பில் சைக்கிள் செயினை கட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

இதை கண்ட ஆசிரியர்கள் அவரை பள்ளியில் இருந்து நிறுத்தியுள்ளனர். பின்னர், அவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் ஆசிரியர்களிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

ஆயுதம் வைத்திருந்த வழக்கு

பின்னர் வாலிப வயதில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவருடைய தந்தை அவருக்கு மாட்டுப் பண்ணை வைத்து கொடுத்துள்ளார். ஆனால், அதையும் சரிவர நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. 1992-ம் ஆண்டு போடியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டார்.

அதன்பிறகு பெரியகுளம் பகுதியில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர், 1993-ம் ஆண்டு மதுரை, தேனி மாவட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டார். போலீசார் தேடுவதை அறிந்து, சென்னைக்கு சென்று விட்டார்.

சென்னையில் 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் தொடர்ந்து பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். 1996-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மையம் கொண்டு பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களிலும், கொலை முயற்சி சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த கால கட்டத்தில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. 1998-ம் ஆண்டில் துப்பாக்கி வைத்து இருந்ததாக அவர் மீது திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் 34 வழக்குகள்

2001-ம் ஆண்டில் பழனி, உடுமலை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் பல்வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 2002-ம் ஆண்டு மீண்டும் தேனியில் தனது கைவரிசையை காட்டியுள்ளார். 2004-ம் ஆண்டில் அடையாறு, விருகம்பாக்கம் பகுதிகளிலும், 2005-ல் திருப்பூர் பகுதிகளிலும் நகை பறிப்பில் ஈடுபட்டார்.

அதன்பிறகு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று மதுரை, திருச்சி மத்திய சிறைகளில் தண்டனை அனுபவித்து உள்ளார். 2011-ம் ஆண்டு அவர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். சென்னையில் மட்டும் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக அவர் மீது 34 வழக்குகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 100 வழக்குகள் அவர் மீது உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இளம் வயதில் ‘புல்லட்டில்’ சுற்றி வரும் அவர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும்போது போலீசார் கையில் சிக்காமல் தப்பிச் சென்ற வண்ணம் இருந்துள்ளார். 1996-ல் இருந்து 2002-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழகம் முழுவதுமே போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வந்துள்ளார். ஒரு இடத்தில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளியூருக்கு தப்பிச் செல்லும் போது வழிநெடுகிலும் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சிறையில் இருக்கும்போது சட்டம் குறித்து வாசித்து அறிந்துள்ளார். பின்னர் அவர் தன்னை வக்கீல் போன்று அடையாளப்படுத்தி கொண்டு கோர்ட்டுகளுக்கு சென்றும், அங்கு வக்கீல்களுடன் தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் நகை பறிப்பில் ஈடுபட்டது தொடர்பாக எந்த வழக்கும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த கால கட்டத்தில் அவர் நீதிபதி, வக்கீல்கள் பெயரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘புல்லட்’ நாகராஜன் தனது அண்ணன் ரமேசை சிறையில் போலீசார் தாக்கியதால் சிறைத்துறை பெண் சூப்பிரண்டுக்கு மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதேபோல் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா, தான் பணியாற்றும் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் திறந்தவெளியில் மதுபானம் குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்ததால் அவரை கண்டித்தும் ஆடியோ வெளியிட்டுள்ளார். அவை பரபரப்பாக பேசப்பட்டதால் போலீசாரை விமர்சித்தும், மாவட்ட கலெக்டரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

Next Story