ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்


ரசாயன கலவையற்ற விநாயகர் சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:30 PM GMT (Updated: 11 Sep 2018 8:28 PM GMT)

ரசாயன கலவையற்ற வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளையே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என கரூர் கலெக்டர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் தான் பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்றன. எனவே இவற்றை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங் களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில், களிமண்ணால் உருவாக்கப்பட்டு தீயில் சுடப் படாததும் மற்றும் ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு, மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை கழிவுகள் என சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களை கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

நீரில் கரையும் தன்மை யுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை தான் விநாயகர் சிலைகளுக்கு உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. ஏரிகளிலும் மற்ற நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்காமல் மாவட்ட நிர் வாகத்தினால் சிலைகளை கரைப்பதற்கு கண்டறியப்பட்டுள்ள இடங்களான காவிரி ஆற்றின் கரையில் உள்ள தவுட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர் மற்றும் குளித்தலை கடம்பர் கோவில் அருகிலும், அமராவதி ஆற்றில் அரவக்குறிச்சி ராஜபுரம் ஆகிய இடங்களிலும் குடிநீர் ஆதாரங்களை பாதிக்காத வண்ணம் அவற்றிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும். எனவே விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாட வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாக நீர்நிலைகளை மாசு படுத்தும் வகையில் சிலை கரைப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story