திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்


திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து - 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Sep 2018 10:49 PM GMT (Updated: 11 Sep 2018 10:49 PM GMT)

திருப்பத்தூர் அருகே மரத்தில் அரசு பஸ் மோதி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அரசு பஸ் நேற்று புறப்பட்டது. அந்த பஸ்சை டிரைவர் பாலாஜி (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். கந்திலியை அடுத்த தாதங்குட்டை என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது, முன்னே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஊருக்குள் செல்லும் சாலையை நோக்கி மோட்டார் சைக்கிளை திடீரென திருப்பினார்.

அதனால் மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை வளைத்தார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த பாரண்டப்பள்ளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 70), அசோக்குமார் (31), பஸ் கண்டக்டர் வெங்காயப்பள்ளியை சேர்ந்த ராமலிங்கம் (45), விஷமங்கலத்தை சேர்ந்த முருகன் (40) உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்கு பிறகு டிரைவர் பாலாஜி உள்பட 3 பேர் வீடு திரும்பினர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாளர் ஜெயசீலன் கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story