வானவில் : இந்தியாவில் ஆலை அமைக்கும் ‘பெனலி’ நிறுவனம்


வானவில் : இந்தியாவில் ஆலை அமைக்கும் ‘பெனலி’ நிறுவனம்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:12 PM IST (Updated: 12 Sept 2018 3:12 PM IST)
t-max-icont-min-icon

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ‘பெனலி’ (Benelli). இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் முக்கியமானவை சூப்பர் பைக்குகள்.

 கம்பீரமான தோற்றத்திலும், சாலையில் சீறிச்செல்லும் அதிவேகத்திலும் தன்னிகரற்று விளங்குபவை பெனலி பைக்குகள். சர்வதேச அளவில் நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களிலும் வெற்றிக்கோப்பைகளை பெனலி பைக்குகள் பெற்றுள்ளன.

இத்தனை சிறப்புகள் கொண்ட பெனலி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கூட்டணியுடன் களம் இறங்குகிறது. 2015-ம் ஆண்டு புனேயில் உள்ள நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தனது தயாரிப்புகளை இந்தியாவில் பெனலி விற்றது. இதுவரை சுமார் 5800 பைக்குகளை இந்தியாவில் விற்றுள்ளனர். கடந்த மே மாதத்துடன் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து பெனலி நிறுவனம் தற்போது மகாவீர் குழும நிறுவனங்களில் ஒன்றான ஆதிஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இதுவரை இறக்குமதி மூலமாக விற்பனைக்கு வந்த பெனலி பைக்குகள், இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக தெலுங்கானா மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும், ஐதராபாத்தின் மெட்சல் பகுதியில் ஆலையை அமைத்து வருகின்றனர்.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் உற்பத்தி ஆலை பணிகளில், முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துவிட்டன. அதன்படி அசெம்பளி பணிகளுக்காக கட்டப்பட்ட ஆலை, வெகுவிரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களையும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உதிரி பாகங்களையும் இங்கு ஒருங்கிணைத்து, சூப்பர் பைக்குகளாக விற்பனை செய்ய உள்ளனர்.

பெனலி நிறுவனத்தின் திட்டப்படி, இந்த அசெம்பளி ஆலையின் மூலம் ஆண்டிற்கு 10 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்க உள்ளனர். இந்த ஆலை அடுத்த (அக்டோபர்) மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டமாக, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தி ஆலையும், பாகங்களை ஒருங்கிணைக்கும் அசெம்பளி ஆலையையும் ஒருங்கே அமைக்க உள்ளனர். 20 ஏக்கர் பரப்பில், மிக பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்த ஆலையை தெலுங்கானா மாநிலத்திலேயே அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் விற்பனையை அதிகரிக்க அடுத்த (2019) ஆண்டுக்குள் 135 முதல் 200 சி.சி வரையுள்ள 12 வகையான மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் சாதாரண ரக மோட்டார் சைக்கிளின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கிறது. ஆனால் சூப்பர் பைக்குகளின் சந்தை வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உள்ளது.

தற்போது பிரீமியம் ரக பைக் சந்தையில் பெனலி 21 சதவீத சந்தையைப் பிடித்துள்ளது. பெனலி நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இந்தியாவில் அமைய இருப்பது, பிரீமியம் பைக் பிரியர்களுக்கு உற்சாகமான செய்தியாகவே உள்ளது.

பெனலி காரேஜ்

இத்தாலியில் உள்ள பெசரோ (Pesaro) நகரில் பெனலி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு ஆலை 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐரோப்பாவில் உள்ள மிகப்பழமையான மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் பெனலி தான்.

கணவர் பெனலி மறைந்த உடன் தெரசா பெனலி தனது குடும்ப சொத்து முழுவதையும் பயன்படுத்தி ஒரு நிறுவனம் தொடங்கினார். அதன் பெயர் ‘பெனலி காரேஜ்’. இங்கு சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பழுது பார்க்கப்பட்டன. பெனலியின் 6 மகன்கள் ஜியோசிபி, ஜியோவன்னி, பிரான்செஸ்கோ, பிலிப்போ, டொமினிகோ மற்றும் அன்டோனியோ ஆகியோர் இதில் பணிபுரிந்தனர். இவர்கள் தவிர 6 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த பெனலி காரேஜ் தான் படிப்படியாக வளர்ந்து பெனலி மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் ஆனது. 1919-ம் ஆண்டு முதன் முதலாக சைக்கிள் பிரேமில் என்ஜின் பொருத்தி தங்களது முதல் மோட்டார் சைக்கிளை பெனலி நிறுவனம் தயாரித்தது.

பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியாவில் பிரீமியம் பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, தனது தயாரிப்புகளை களமிறக்கியுள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்துடன் இணைந்து ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

Next Story