மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கி கொடுப்பதாக கூறிய 4 பேர் கைது: ‘நீட்’ தேர்வாணைய அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது அம்பலம்
மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கி கொடுப்பதாக கூறி 4 பேர் கைதான விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு,
மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கி கொடுப்பதாக கூறி 4 பேர் கைதான விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள், ‘நீட்’ தேர்வாணைய அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.
4 பேர் கைது
பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் ‘சீட்’ பெற்று தருவதாக கூறி ஒரு கும்பல் தொடர்ச்சியாக பணமோசடி செய்து வந்தது. இதுதொடர்பாக கப்பன்பார்க், ஐகிரவுண்டு உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. உத்தர பிரதேசத்தை சேர்ந்த டாக்டரின் மகனுக்கு ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.11.50 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒடிசாவை சேர்ந்த 4 பேரை கப்பன் பார்க் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், அவர்களின் பெயர்கள் சுபாசித் பட்டி (வயது 31), சமார்ஜித் பண்டா (41), இந்திரஜித் (35), கவுரவ் (34) என்பது தெரியவந்துள்ளது. இன்னும் சிலர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு தகவல்கள்
இந்த விசாரணையின்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜா கூறுகையில், ‘கைதானவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்து ‘நீட்’ தேர்வாணைய அதிகாரிகளிடம் இருந்து பெற்றதும், அந்த விவரங்களை கொண்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபட்டனர். இதனால் விரைவில் டெல்லி சென்று ‘நீட்’ தேர்வாணைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருக்கிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story