பெங்களூருவில் சட்டசபை தேர்தலின்போது ரூ.31.87 கோடி நகை-பணம் பறிமுதல் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்


பெங்களூருவில் சட்டசபை தேர்தலின்போது ரூ.31.87 கோடி நகை-பணம் பறிமுதல் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தகவல்
x
தினத்தந்தி 12 Sep 2018 11:30 PM GMT (Updated: 12 Sep 2018 6:25 PM GMT)

பெங்களூருவில், சட்டசபை தேர்தலின்போது ரூ.31.87 கோடி நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில், சட்டசபை தேர்தலின்போது ரூ.31.87 கோடி நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று துணை முதல்-மந்திரியும், போலீஸ் மந்திரியுமான பரமேஸ்வர் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், கூடுதல் போலீஸ் கமிஷனர்களான ஹிதேந்திரா, சீமந்த் குமார் சிங், பி.கே.சிங், மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சதீஸ்குமார் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போலீஸ் துறை சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

துணை போலீஸ் கமிஷனர்கள் தான் பொறுப்பு

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ‘நகரில் தங்க சங்கிலி பறிப்பு, கஞ்சா விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள், ரெயில்களில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறதா? என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், பழைய ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பொதுமக்களின் புகார் குறித்து விசாரணை நடத்தி விரைவாக தீர்வு காண வேண்டும். தவறு செய்யும் போலீஸ்காரர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும், முன்னாள் துணை ஜனாதிபதி ஜத்திக்கு போலீசார் தொல்லை கொடுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பரமேஸ்வர் உத்தரவிட்டார். மேலும், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, நகரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட துணை போலீஸ் கமிஷனர்களும், உதவி போலீஸ் கமிஷனர்களும் தான் பொறுப்பு என்று அவர் கூறினார்.

பேட்டி

இதற்கு பின்னர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

குண்டர் சட்டத்தில் 14 பேர் கைது

நடப்பு ஆண்டில் குண்டர் சட்டத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போதைப்பொருள் விற்ற 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தங்க சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சட்டசபை தேர்தலின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக பறிமுதல் செய்யப்பட்ட் பணம்-தங்க நகைகளின் மதிப்பு ரூ.31.87 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் கஞ்சா விற்பனை செய்ததாக 151 வழக்குகள் பதிவாகி உள்ளதோடு, 298 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து 591 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் 28 பேர் வெளிநாட்டினர் அடங்குவர். சட்டவிரோதமாக தங்கியதாக 107 வெளிநாட்டினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் விரைவில் அவர்களின் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

ரூ.55 கோடி அபராதம்

நடப்பு ஆண்டில் போக்குவரத்து விதிமீறியதாக மொத்தம் 54 லட்சத்து 86 ஆயிரத்து 854 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. ரூ.55 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. நகரில் போக்குவரத்தை கவனிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிக்னல் கேமராக்கள் பொருத்துவதுடன், போலீசாரின் உடைகளிலும் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்கள் உடல்நலத்தை பாதுகாக்கும் வகையில் மாதத்தில் குறைந்தபட்சம் 2 முறை அணிவகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story