சென்னையில் 2,520 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2,520 இடங்களில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
சென்னை,
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2,520 இடங்களில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். விநாயகர் சிலை பாதுகாப்பு மற்றும் ஊர்வலத்துக்கு 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை உள்பட தமிழகத்திலும் மக்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடுகிறார்கள். அனைத்து விநாயகர் கோவில்களும் பந்தல்போட்டு வாழை மர தோரணங்களுடன் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மின்விளக்குகளும் விநாயகர்கோவில்களில் ஜொலிக்கின்றன.
சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாட்டுக்காக பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இந்துமுன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்து தெருக்களில் வழிபாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
தீவிர பரிசீலனைக்குப்பிறகு சென்னையில், 2,520 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய நேற்று மாலை போலீசார் அனுமதி வழங்கினார்கள். கடந்த ஆண்டு 2,672 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வழிபாட்டுக்காக அதிகபட்சமாக 10 அடி உயரம் வரை, சிலைகளை வைக்கலாம் என்று போலீசார் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசாரை பாதுகாப்புக்காக ஈடுபடுத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் அனுமதித்த இடங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை 13–ந்தேதி (இன்று) முதல் 17–ந்தேதி வரை வைக்கப்படுகிறது. பின்னர் 5 நாட்களுக்குப்பின்னர் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்க போலீசார் அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.
நீலாங்கரை பல்கலைநகர், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், காசிமேடு மீன்பிடிதுறைமுகம், திருவெற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம், எண்ணூர் ராமகிருஷ்ண நகர் ஆகிய 5 இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கவும் போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர், விநாயகர் சிலைகளை 16–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கிறார்கள். அன்றைய தினம் விநாயகர் சிலை ஊர்வலம் பெரிய அளவில் சென்னையில் நடைபெறும் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படுகிறார்கள்.
விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை சென்னை முழுவதும் போலீசாரை உஷார் நிலையில் இருக்கும்படியும், ரோந்துப்பணியை தீவிரப்படுத்தியும் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Related Tags :
Next Story