பார்வதிபுரம் மேம்பால பகுதியில் மத்திய மந்திரி திடீர் ஆய்வு


பார்வதிபுரம் மேம்பால பகுதியில் மத்திய மந்திரி திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 7:45 PM GMT)

நாகர்கோவிலில் 22-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி பார்வதிபுரம் மேம்பால பகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேம்பால பகுதியில் போக்குவரத்து தொடங்குவது பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவில், 


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பார்வதிபுரம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வருவதால் விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்ல சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் 22-ந் தேதி அன்றும், அதற்கு முந்தைய நாளான 21-ந் தேதியும் பார்வதிபுரம் மேம்பாலப்பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதற்கு வழி ஏற்படுத்தி தரவேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து நாகர்கோவில் வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பார்வதிபுரம் மேம்பாலப்பணிகளை நேற்று காலை திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகனும் உடன் இருந்தார்.
பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1½ ஆண்டுகளாக நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மேம்பாலப்பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இன்னும் ஏறக்குறைய 1½ மாதத்தில் இந்த பணிகள் முழுமை பெற்று பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இடைப்பட்ட காலத்தில் வருகிற 22-ந் தேதி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா குமரி மாவட்டத்தில் நடக்கிறது.

அன்றைய தினம் தமிழகத்தின் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வருகை தர இருக்கிறார்கள். அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பால பணியை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி ஆய்வு செய்வதற்காக வந்தேன். ஏற்கனவே பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிற காரணத்தினால், வாகன போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் இந்த பணிகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்னர் அவரிடம், பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன் முதலில் உங்களோடுதான் கூட்டணி என்று நிருபர்களை பார்த்து சிரித்தபடி கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் தனசேகர், பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், கிருஷ்ணன், எஸ்.ஏ.விக்ரமன் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story