என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் உடல் சிதறி சாவு


என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் உடல் சிதறி சாவு
x
தினத்தந்தி 13 Sept 2018 3:15 AM IST (Updated: 13 Sept 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பதுக்கி வைக்க முயன்றபோது வெடித்ததில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் உடல் சிதறி பலியான பயங்கர சம்பவம் நடந்தது.

ஈரோடு, 

ஈரோடு வளையக்கார வீதி காமாட்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 45). இவர் அங்கு மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான இன்னொரு வீடு சாஸ்திரிநகர் விநாயகர்கோவில் வீதி பகுதியில் உள்ளது. அந்த வீட்டில் பாபி-ஜாஸ்மின் என்பவர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் அங்கு ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.

இங்கு நேற்று அதிகாலை 5.45 மணி அளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில் அந்த பகுதியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் வெடித்து சிதறின. பல வீடுகளின் சுவர்கள் இடிந்து பெயர்ந்து விழுந்தன. அக்கம்பக்கத்து வீடுகளில் கண்ணாடி ஜன்னல்கள் வெடித்தன. அதிகாலை நேரத்தில் கியாஸ் சிலிண்டர் ஏதேனும் வெடித்து விட்டதோ? என்று அந்த பகுதியினர் வெளியே வந்தனர். பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என பலரும் வெளியே ஓடினார்கள். அப்போது விநாயகர் கோவில் வீதியில் பாபி, ஜாஸ்மின் ஆகியோர் நடத்தி வரும் பெட்டிக்கடை இருந்த அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து கிடந்தது.

சாலையில் உடல் சிதறிய நிலையில் 2 ஆண்களின் பிணம் கிடந்தது. என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் பொதுமக்கள் அலறித்துடிக்கவே அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து ஓடுகள் பொலபொலவென பெயர்ந்து விழுந்தன. 7-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் இடிந்து பெயர்ந்தன. . அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மினிடோர் வேன் உருக்குலைந்து முழுமையாக வெடித்து சிதறி இருந்தது. அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பயணிகள் ஆட்டோ ஒன்றின் மேல்பகுதி தூக்கி வீசப்பட்டு இருந்தது. அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சில மோட்டார் சைக்கிள்களும் பாதிப்பில் சிக்கி இருந்தன.

இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுபார்வையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், வீதியில் உடல் சிதறிய நிலையில் கிடந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது சுவர் இடிபாடுகளுக்குள் மேலும் ஒருவர் உடல் சிதறி பிணமாக கிடப்பது தெரியவந்தது.

வீட்டின் உரிமையாளரை பிடித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஆபத்தான பட்டாசுகளை பதுக்கி வைக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு 4-வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் எஸ்.முருகன் (45). தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த இவர் ஈரோட்டுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து இங்கேயே மளிகைக்கடை வைத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது மளிகைக்கடையில் தீபாவளி நேரங்களில் பட்டாசு விற்பனை செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அரசால் தடை செய்யப்பட்ட கல் பட்டாசு (எறிகுண்டு அல்லது வெங்காய வெடி) விற்று வந்தார். சட்டவிரோதமாக இதனை தயாரிப்பவர் யாரிடமோ வாங்கி இவர் விற்பனை செய்து வந்தார். 
அதன்படி இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு கல்வெடி வாங்க தயாரானார். முருகன் அவருடைய நண்பர் சுகுமாரன் என்பவரிடமும் கல்வெடி தேவையா? என்று கேட்டு உள்ளார். சுகுமாரன் ஈரோடு வளையக்காரவீதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரும் பட்டாசு தேவை என்று கூறினார். அதைத்தொடர்ந்து முருகன் மற்றும் ஈரோடு சுத்தானந்தன் நகர் இந்திராகாந்தி வீதியை சேர்ந்த செந்தூர்பாண்டியன் (50) என்பவருடைய மினிடோர் வேனில் பட்டாசு தயாரிக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று பட்டாசுகள் வாங்கினார்கள்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் வளையக்கார வீதி பகுதிக்கு வந்த அவர்கள் சுகுமாரனின் வீட்டில் அவருக்கு உரிய பட்டாசு பெட்டிகளை இறக்கி வைத்தனர். பின்னர் மீதம் உள்ள பட்டாசுகளை வைக்க பாதுகாப்பான இடம் வேண்டும் என்று முருகன் கூறினார். அதற்கு சுகுமாரன், அவருக்கு சொந்தமான வீடு சாஸ்திரிநகரில் இருப்பதை கூறினார். அந்த வீட்டில் காலியாக உள்ள இடத்தில் வைக்க சுகுமாரன் அனுமதி வழங்கினார். முருகனுக்கு அந்த வீடு தெரியாது என்பதால் சுகுமாரனின் மகன் கார்த்திக் ராஜா (21) என்பவரை உடன் அனுப்பி வைத்தார். கார்த்திக் ராஜா ஒரு மொபட்டில் முன்னால் வழிகாட்ட, முருகனும், செந்தூர்பாண்டியும் மினிடோர் வேனில் பின்தொடர்ந்து சென்றனர்.

சாஸ்திரிநகர் விநாயகர் கோவில் வீதியில் உள்ள சுகுமாரனின் வீட்டுக்கு காலை 5.30 மணிக்கு அவர்கள் சென்றனர். அங்கு குடியிருந்து வரும் ஜாஸ்மின் கடைக்கு பொருட்கள் வாங்க சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். அவருடைய கணவர் பாபி, தனியார் ஆஸ்பத்திரி காவலர் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

எனவே வீட்டுக்கு வெளியே பட்டாசு பண்டல்களை வைக்க முடிவு செய்த முருகன், செந்தூர்பாண்டியன், கார்த்திக் ராஜா ஆகியோர் வாகனத்தில் இருந்து பட்டாசு பண்டல்களை எடுத்து வெளியில் வைத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்தது. ஒரே நொடியில் அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியதால் இந்த இடமே போர்க்களமாக மாறியது. முருகனும், செந்தூர் பாண்டியனும் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களின் உடல் பட்டாசு துகள்களால் துளைக்கப்பட்டு உருக்குலைந்தது. கார்த்திக் ராஜா தூக்கி வீசப்பட்டபோது அங்கு கட்டிட சுவரும் இடிந்து விழுந்ததில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவர்கள் பட்டாசு கொண்டுவந்த மினிடோர் உருத்தெரியாமல் சிதறியது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட ஒலிதான் அதிகாலையில் பயங்கர சத்தமாக அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ஜெயராஜ் உள்பட பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். வெடிகுண்டு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் அக்குவேறு ஆணிவேறாக சோதனை நடத்தினார்கள். அங்கு வெடித்து சிதறிக்கிடந்த துகள்களையும் அவர்கள் பரிசோதனைக்காக சேகரித்தனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘தடை செய்யப்பட்ட கல்வெடியை பதுக்கி வைக்க முயன்றபோது அது வெடித்து இந்த பயங்கர சம்பவம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றனர். 

Next Story