கண்டமங்கலம் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்கள் கைது


கண்டமங்கலம் அருகே ரவுடி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 13 Sept 2018 3:30 AM IST (Updated: 13 Sept 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே புதுவையைச் சேர்ந்த ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 3 வாலிபர்களை போலீசார நேற்று கைது செய்தனர்.

கண்டமங்கலம்,

புதுவை மாநிலம் வில்லியனூரை அடுத்த பொறையூரை சேர்ந்தவர் ஜெகன் (வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. சம்பவத்தன்று ரவுடி ஜெகன் விழுப்புரம் கண்டமங்கலத்தை அடுத்த சின்ன அமணங்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்றார். அப்போது 3 வாலிபர்கள் ரவுடி ஜெகனிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவத்தன்று ரவுடி ஜெகன் புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பத்தில் மீன் வியாபாரி ராஜேந்திரனிடம் மீன் வாங்கச் சென்றபோது தகராறு ஏற்பட்டது. அந்த தகராறு குறித்து ராஜேந்திரன் வில்லியனூர் போலீசில் புகார் செய்ததால் ஆத்திரம் அடைந்த ரவுடி ஜெகன் அவருடைய வீட்டுக்கு சென்று மீண்டும் அவரிடம் தகராறு செய்ததோடு வீட்டையும் சேதப்படுத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அதனை அறிந்த ராஜேந்திரனின் மகன் நவீன் ரவுடி ஜெகன் மீது கோபம் அடைந்தார். ஏற்கனவே இவருக்கும், ஜெகனுக்கும் முன்விரோதம் இருந்தது.

ரவுடி கொலை

இதற்கிடையே ரவுடி ஜெகன் கண்டமங்கலம் அருகே சின்னஅமணங்குப்பத்தில் உள்ள உறவினரை பார்க்க சென்றிருப்பதை அறிந்த வாலிபர் நவீன் தனது நண்பர்களான புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற விஜயசங்கர், வெள்ளை என்ற கோவிந்தசாமி ஆகியோருடன் சின்ன அமணங்குப்பத்துக்கு சென்றார். அங்கு ரவுடி ஜெகனை சந்தித்து தனது தந்தையிடம் தகராறு செய்தது குறித்து தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த நவீன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக ரவுடி ஜெகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். மேற்கண்ட தகவல்கள் கண்டமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நவீன் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்ய கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் தேடப்பட்டு வந்த நவீன் மற்றும் அவருடைய நண்பர்கள் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று நவீன் (வயது 25), அவரது நண்பர்கள் சரவணன் என்ற விஜய்சங்கர் (24), வெள்ளை என்ற கோவிந்தசாமி (24) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story