திருப்பூர் மாநகராட்சியில் இணையதளம் மூலமாக வரி செலுத்தும் வசதி அமல்
திருப்பூர் மாநகராட்சியில் இணைதளம் மூலமாக வரி செலுத்தும் வசதி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் நான்கு மண்டல அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி வந்தனர். இந்த மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் விரைவில் வரி செலுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்கள் இணையதளம் மூலமாக செலுத்துவதற்கான வசதி நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் மாநகர் நல அதிகாரி பூபதி தலைமை தாங்கி இணைய தளம் மூலமாக வரி செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார்.
இணையதளம்
திருப்பூர் மாநகராட்சி பகுதி மக்கள், https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தங்கள் பெயர், முகவரி, வரியினம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் யூசர் நேம், பாஸ்வேர்டு கிடைக்கும். அதைப்பயன்படுத்தி சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகையை நெட்பேங்கிங் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக செலுத்த முடியும். இணையதளம் மூலமாக வரி செலுத்துவோருக்கு சேவை வரி கிடையாது. மாநகராட்சி அலுவலகத்துக்கு வராமல் அவரவர் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வரிகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்தியதற்கான ரசீதும் இணையதளம் மூலமாகவே கிடைக்கும்.
இந்த இணையதள சேவை பற்றிய விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை உதவி ஆணையாளர்(கணக்கு) சந்தானநாராயணன் பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி திட்ட அமைப்பாளர் சவுதாமணி, வருவாய் கண்காணிப்பாளர் தங்கவேல்ராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story