ஆனூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆனூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:45 PM GMT (Updated: 12 Sep 2018 9:01 PM GMT)

15 வேலம்பாளையத்தில் உள்ள ஆனூர் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பழமை வாய்ந்த ஆனூர் கரியகாளியம்மன் கோவில் உள்ளது. பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளித்தரும் தெய்வமாக ஆனூர் கரியகாளியம்மன் அருள்பாலித்து வருகிறார். கரியகாளியம்மன், பூமிதேவி, நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள், மங்கள கணபதி, கல்யாண சுப்பிர மணியர், கனகதுர்க்கை, பக்த ஆஞ்சநேயர், சப்த கன்னிமார், நவக்கிரக ஆலயம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட ராஜகோபுரத்துக்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் 100 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, விக்னேஷ்வர பூஜையுடன், ஆறாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து தீபாராதனையுடன், கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டது. புனித கலசங்களை சிவாச்சாரியார்கள் கோவில் ராஜகோபுரத்துக்கு எடுத்துச்சென்றனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் 2-ம் ஸ்தானீகமும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அர்ச்சகருமான ராஜாபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள், காலை 6.45 மணிக்கு கரியகாளியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார்கள்.

புனிதநீர் தெளிப்பு

அப்போது கோவிலை சுற்றியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்றும், ‘கோவிந்தா, கோவிந்தா’ என்றும் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். கோவிலை சுற்றியும் ‘ஸ்பிரிங்லர்’ கருவிகள் அமைத்து பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. 7 மணிக்கு கரியகாளியம்மன் மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முதல் கோவிலில் தினமும் மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவில் சத்தியபாமா எம்.பி., காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், நிர்வாகி வி.ஆர்.ஈஸ்வரன், 15 வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வி.கே.பி.மணி, மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர் ஜான், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகிகள் கோவிந்தசாமி, ராமதாஸ், அ.ம.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, நிர்வாகிகள் ஈஸ்வரன், தண்ணீர்பந்தல் தனபால், சதீஷ், கொ.மு.க. நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி, தொழிலதிபர்கள் பரணி நடராஜ், சிட்டி வெங்கடாசலம் மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அன்னதானம்

கும்பாபிஷேக விழாவையொட்டி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் வரிசையாக சென்று சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல்லாயிரக்கணக்கானவர்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக மருத்துவக்குழு, தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சு உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. விழா நடைபெற்ற கோவில் சுற்றுவட்டாரம் முழுவதும் திருப்பணி குழு சார்பில் தன்னம்பிக்கை வாசகங்கள், இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகம் மற்றும் 15 வேலம்பாளையம் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், சோளிபாளையம், சிறுபூலுவப்பட்டி, அம்மாபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள், தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

கலைநிகழ்ச்சி

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் அண்ணாத்துரை தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுபோல் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை மாற்றம் செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை கரியகாளியம்மன் அறக்கட்டளை திருப்பணிக்குழுவினர், கொங்கு வேளாள பயிரகுல மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு தனியார் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி மற்றும் திரைப்பட இயக்குனர் செல்ல தங்கையா குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.

Next Story