திண்டுக்கல் மாவட்டத்தை வளமாக்கும் குதிரையாறு-மாங்கரை ஆறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?


திண்டுக்கல் மாவட்டத்தை வளமாக்கும் குதிரையாறு-மாங்கரை ஆறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுமா?
x
தினத்தந்தி 13 Sept 2018 3:24 AM IST (Updated: 13 Sept 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில் கலக்கும் குதிரையாற்றின் உபரிநீரை கன்னிவாடி அருகே உற்பத்தியாகும் மாங்கரை ஆற்றுடன் இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து உருவாகி வரும் குதிரையாறு.
காடு, மலை, ஆறு, பாலைவனம், கடல் போன்ற பல்வேறு வகையான இயற்கை அமைப்பை உள்ளடக்கியது பூமி. இவற்றில், மனிதனுக்கு ரத்த ஓட்டம் போல பூமியின் உயிரோட்டத்துக்கு ஆறுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்றால் மிகையல்ல.

பூமியில் வற்றாத ஜீவ நதிகளும் உண்டு. பருவகாலங்களில் மட்டும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் சிற்றாறுகளும் உண்டு. இதில், பெரும்பாலான ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட மனிதன் முறையாக நடவடிக்கை எடுக்காததால் ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சில ஆறுகள் மக்களுக்கு பயன்படாமல் திருப்பூர் மாவட்டம் வழியாக காவிரியில் கலந்து கடலுக்கு செல்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்த ஆறுகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தை பற்றியும், புவியியல் அமைப்பை பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். திண்டுக்கல் மாவட்டம் மலையும், மலை சார்ந்த பகுதியாகும். நிலப்பரப்பானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 620 முதல் 800 அடி உயரமும், மலையடிவார பகுதிகள் சுமார் 800 முதல் 1,100 அடி உயரமும் கொண்டவை.

வறட்சி மாவட்டம்

மாவட்டத்தின் முக்கிய பகுதியாகவும், மேற்கு எல்லையில் அரணாகவும் விளங்குவது மேற்கு தொடர்ச்சி மலை. இருப்பினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீருக்கும், விவசாய சாகுபடிக்கும் போதிய தண்ணீர் இல்லை. பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 1,000 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால், திண்டுக்கல் வறட்சி மாவட்டமாகவே கருதப்படுகிறது.

இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலை என்பது நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு ஆறுகள் உற்பத்தியாகின்றன. அந்த வகையில், நங்காஞ்சியாறு, வரதமாநதி, குதிரையாறு, குடகனாறு, நல்லதங்காள் ஓடை, மாங்கரை ஆறு ஆகியவை கொடைக்கானல் மலை அடிவார பகுதிகளில் உற்பத்தியாகி வடக்கு நோக்கி பாய்ந்து காவிரியில் கலக்கிறது.

விவசாயிகளின் நம்பிக்கை

மருதாநதி ஆறு தெற்கு நோக்கி பாய்ந்து வைகையில் கலக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு தென்மேற்கு பருவமழையால் 35 சதவீதமும், வடகிழக்கு பருவமழையால் 65 சதவீதமும் நீர் கிடைக்கிறது. இருப்பினும், பருவமழை காலங்களில் மேலே குறிப்பிட்ட ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் நாம் பெரிதாக பாசன வசதி பெற முடியவில்லை.

அதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகளால் மாவட்ட மக்களுக்கு பெரிதாக ஒரு பயனுமில்லை என்ற கருத்து நிலவுகிறது. இருப்பினும், சில ஆறுகளை வறட்சியான பகுதிகளுக்கு திருப்பிவிட்டால் பாசன வசதி பெற முடியும் என்பது விவசாயிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதுகுறித்து, பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன.

குழாய்கள் மூலம் இணைப்பு

குறிப்பாக, கொடைக்கானல் மலையின் மேற்கு எல்லையில் உற்பத்தியாகி திருப்பூர், கரூர் மாவட்டங்கள் வழியாக ஓடி காவிரியில் கலக்கும் குதிரையாற்றின் உபரிநீரை கன்னிவாடி அருகே உற்பத்தியாகும் மாங்கரை ஆற்றுடன் இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும். இதன்மூலம், பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் ஆகிய 5 ஒன்றிய பகுதிகள் பயனடையும்.

கால்வாய் வெட்டாமல், குழாய்கள் மூலமாக நீரை கொண்டு வந்து மாங்கரை ஆற்றின் குறுக்கே கன்னிவாடி அருகே கட்டப்பட்டுள்ள நாயோடை அணையுடன் இணைத்தால் மேட்டுப்பாங்கான பகுதிகளும் பாசன வசதி பெரும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதற்கான சாத்தியகூறுகள் உள்ளதா? என்பது குறித்து வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பிரிட்டோராஜ், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் லட்சுமண பெருமாள் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தி உள்ளனர்.

பிரகாசமான வாய்ப்பு

ஆய்வின் முடிவில், குதிரையாறு-மாங்கரை ஆற்றை குழாய்கள் மூலமாக இணைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, உடனடியாக குதிரையாறு-மாங்கரை ஆற்றை இணைக்க திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story