கோகுல்ராஜின் தோழி திடீர் பல்டி: மாணவி கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் - அரசு வக்கீல்


கோகுல்ராஜின் தோழி திடீர் பல்டி: மாணவி கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் - அரசு வக்கீல்
x
தினத்தந்தி 13 Sept 2018 4:45 AM IST (Updated: 13 Sept 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் மாணவி கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் என அரசு வக்கீல் கூறினார்.

நாமக்கல்,

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையின் போது மாணவி தான் கோவிலுக்கே செல்லவில்லை என கூறினார். இதையடுத்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அவர் கோவிலுக்கு வந்ததை நிரூபிப்போம் என அரசு வக்கீல் கருணாநிதி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை வழக்கில் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனர். இதில் ஜோதிமணி என்பவர் கொலை செய்யப்பட்டு விட்டார். அமுதரசு தலைமறைவாகி விட்டார்.

மீதமுள்ள 15 பேரும் நாமக்கல் கோர்ட்டில் நடைபெறும் சாட்சி விசாரணையில் ஆஜராகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இந்த வழக்கில் அரசு தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோகுல்ராஜின் தோழி கல்லூரி மாணவி சுவாதி நாமக்கல் கோர்ட்டுக்கு சாட்சியம் அளிக்க வந்தார்.

அப்போது அரசு தரப்பு வக்கீல் கருணாநிதி சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் சேகரித்து இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். இது ‘இன்கேமரா’ எனப்படும் திரைமறைவு நடைமுறையில் நடைபெற்றது. அப்போது கோகுல்ராஜின் தோழி சுவாதி, கோகுல்ராஜ் தரப்பு வக்கீல், யுவராஜ் தரப்பு வக்கீல் மட்டுமே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு கோர்ட்டுக்குள் வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சுவாதி தன்னை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு அவர் நீங்களே, பத்திரிகையாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார். இதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் அவர் புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

பின்னர் நடந்த விவாதத்தின் போது சுவாதி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவம் தான் இல்லை என்றும், கோகுல்ராஜ் கொலை சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும், அன்று கோவிலுக்கே நான் செல்லவில்லை என்றும் கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாட்சியான சுவாதி, கோகுல்ராஜ் கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டதால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எனவே அடுத்தகட்டமாக இந்த வழக்கை எப்படி கொண்டு செல்வது என அரசு வக்கீலுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது கோவிலுக்கே செல்லவில்லை என மாணவி பல்டி அடித்தது குறித்து அரசு தரப்பு வக்கீல் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

திருச்செங்கோடு மலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் சுவாதி தான் என்பதை நாங்கள் தடய அறிவியல் சோதனை மூலமாக நிரூபிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம் கோவிலுக்கு வந்தது மாணவி சுவாதிதான் என்பதை நாங்கள் நிரூபிப்போம். ஏற்கனவே இந்த பதிவுகளை தடய அறிவியல் ஆய்வு செய்த நிபுணர்களும் இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க உள்ளனர். எனவே அறிவியல் ரீதியாக உண்மைகளை வெளியே கொண்டு வந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கு விசாரணை வருகிற 18-ந் தேதி மீண்டும் நீதிபதி இளவழகன் முன்னிலையில் நாமக்கல் முதன்மை கோர்ட்டில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story