திருச்சியில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் லாரிகளில் மணல் கடத்தல்


திருச்சியில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் லாரிகளில் மணல் கடத்தல்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:29 PM GMT (Updated: 12 Sep 2018 10:29 PM GMT)

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு மீண்டும் லாரிகளில் மணல் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீரங்கம், 


திருச்சி-திருவானைக்காவல் சாலையில் ஸ்ரீரங்கம் தாலுகா வெள்ளித்திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி பாரதிதாசன் தலைமையில் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவளர்ச்சோலை பகுதியில் இருந்து 2 டாரஸ் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர். காவிரி, கொள்ளிடம் கரையோரப்பகுதியிலும் மறைந்திருந்து கண்காணித்தனர். அந்த வேளையில் திருவானைக்காவல் சாலையில் மணல் கடத்திக் கொண்டு 2 டாரஸ் லாரிகள் வந்து கொண்டிருந்தன. லாரிகளுக்கு முன்னால், 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் செல்போனில் பேசியபடி சென்று கொண்டிருந்தனர்.

2 டாரஸ் லாரிகளை பார்த்ததும் அதிகாரிகள் குழுவினர் அதை மடக்கினர். அப்போது ஒவ்வொரு லாரியிலும் தலா 8 யூனிட் வீதம் மணல் ஏற்றப்பட்டு இருந்தது. மணல் எடுத்து செல்வதற்கான எவ்வித ஆவணமும் இல்லை. விசாரணையில், அவர்கள் 2 டாரஸ் லாரி மணலும் பெங்களூருக்கு கடத்தி செல்வதாக தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டதாக திருச்சி லால்குடி மங்கம்மாள்புரத்தை சேர்த்த சரவணன் (வயது35), அய்யாக்கண்ணு(38), ராஜா(30), கன்னியாகுமரி மாவட்டம் கூடுதுறையை சேர்ந்த சுந்தர்ராஜ் (50), கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மூப்புவலசு புதன்வீடுவை சேர்ந்த அசீஸ்(25) ஆகிய 5 பேரை பிடித்து ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் கைது செய்தார். மார்த்தாண்டத்தை சேர்ந்த கென்னடி என்பவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் கடத்தப்பட்ட மணலுடன் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் வழியில் உள்ள திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள காவிரி, கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் இரவு வேளையில் மணல் கடத்தப்பட்டு பெங்களூருக்கு அனுப்பப்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை செய்தபோது, லாரிகளில் மணல் கடத்தியதாக மணமேடு சுப்பிரமணியன், மகேந்திரமங்கலம் ராஜ்குமார், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மணல் கடத்தலுக்கு திருச்சி மாநகர நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உடந்தையாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஒருவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, போலீஸ் பாதுகாப்புடன் மணல் கடத்தப்பட்டது. மணல் கடத்தல் லாரிகளுக்கு முன்னால் போலீஸ் ஜீப் ரோந்து செல்வதுபோல மாநகரை எல்லையை தாண்டி பாதுகாப்பாக விட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் மணிகண்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர்தான் இந்த மணல் கடத்தலுக்கு தூண்டுதலாக இருந்ததும் தெரியவந்தது.

அந்த பிரச்சினைக்கே இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் மணல் கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது. எனவே, இந்த மணல் கடத்தல் சம்பவத்திற்கும் போலீசார் யாரேனும் உடந்தையாக இருக்க கூடுமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story