ஏ.டி.எம்.கார்டு வந்த ½ மணி நேரத்தில் ஆசிரியை வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் அபேஸ் ஊழியர்களுக்கு தொடர்பா? போலீஸ் விசாரணை
ஏ.டி.எம். கார்டு கிடைத்த ½ மணி நேரத்தில் ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
காட்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஸ்பியா பாத்திமா. தனியார் பள்ளி ஆசிரியை. இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஏ.டி.எம். கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதன் பேரில் சில நாட்களில் அவருக்கு ஏ.டி.எம். கார்டு தபால் மூலம் வீட்டுக்கு வந்தது.
ஏ.டி.எம். கார்டு கிடைத்த ½ மணி நேரத்தில் அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம். கார்டை ஆக்டிவேட் செய்ய அதில் உள்ள நம்பர் மற்றும் ரகசிய எண்ணை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். உடனே அஸ்பியாபாத்திமாவும் எண்களை கூறியுள்ளார்.
ரூ.50 ஆயிரம் அபேஸ்
அவர் எண்களை தெரிவித்த சில நிமிடங்களில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து 2 தவணையாக ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்த போது ஏ.டி.எம். கார்டு எண், ரகசிய எண் ஆகியவற்றை நாங்கள் கேட்கவில்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இதுகுறித்து அஸ்பியா பாத்திமா நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அஸ்பியா பாத்திமாவுக்கு ஏ.டி.எம். கார்டு வந்தது மர்ம நபர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. அவருக்கு ஏ.டி.எம். கார்டு அனுப்பப்பட்டது குறித்து வங்கியில் உள்ள யாரோ ஒருவர்தான் மர்ம நபர்களுக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story