வேலூரில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்


வேலூரில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:35 PM GMT (Updated: 12 Sep 2018 10:35 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் வாங்கவும், பூஜை பொருட்கள் வாங்கவும் நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

வேலூர், 

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது. அதிகபட்சமாக 20 அடி உயரம் கொண்ட சிலைகள் வைக்கப்படுகிறது. இவை தவிர பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்கு சிறிய வடிவிலான சிலைகள் தயாரிக்கும் பணியும், விற்பனையும் நடைபெற்று வருகிறது. இன்று சிலைகள் வைக்கப்பட்டு 3 நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. பின்னர் வேலூர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் 15-ந் தேதி (சனிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்படுகிறது.

சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை

இதற்காக சதுப்பேரி ஏரியில் மாநகராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை கரைக்க மொத்தம் 16 இடங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இன்று விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட இருப்பதால் நேற்று விநாயகர் சிலைகள் விற்பனை ஜோராக நடைபெற்றது. பொதுமக்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக சிறிய வடிவிலான சிலைகளை வாங்கிச்சென்றனர். மேலும் பூஜைக்கு தேவையான பழவகைகள், வாழையிலை, விளாங்காய், நிலக்கடலை மற்றும் சிறிய வண்ணவண்ண குடைகள் ஆகியவற்றை வாங்கினர்.

அலைமோதிய கூட்டம்

இதனால் வேலூர் பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிகளிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story