ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதல்: 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பலி நெல்லை அருகே பரிதாபம்
நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நெல்லை,
நெல்லை அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை உள்பட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
உறவினர் வீட்டு திருமணம்
நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம்நகர் ஈசுவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனசேகர் (வயது 25). இவருடைய மனைவி சிவரஞ்சனி (21). இவர்களுக்கு பாலமுகில் (2½) என்ற மகனும், புகல்யா (1½) என்ற மகளும் உண்டு.
இவர்களின் உறவினர் திருமணம் நெல்லை அருகே உள்ள சிங்கிகுளம் பகுதியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக சிவரஞ்சனி தனது குழந்தைகள் மற்றும் பெற்றோரான பாளையங்கோட்டை உத்திரபசுபதி நாயனார் தெருவைச் சேர்ந்த வனராஜ், சுப்புலட்சுமி ஆகியோருடன் நேற்று ஆட்டோவில் சிங்கிகுளத்திற்கு சென்றார். ஆட்டோவை வனராஜ் ஓட்டினார்.
குழந்தை உள்பட 2 பேர் பலி
பின்னர் திருமண நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அவர்கள் அதே ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். நெல்லை அருகே உள்ள பிராஞ்சேரி விலக்கு பகுதியில் வந்தபோது எதிரே சிங்கிகுளம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (53), அவருடைய மனைவி வள்ளி, பேத்தி கார்த்திகா (10) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 5 பேரும், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
படுகாயம் அடைந்த குழந்தைகள் உள்பட 8 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை புகல்யா, முருகன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story