சேலம்: குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலன்-காதலி விஷம் குடித்தனர்


சேலம்: குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலன்-காதலி விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 13 Sept 2018 4:29 AM IST (Updated: 13 Sept 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலன்-காதலி விஷம் குடித்தனர். மகளின் முடிவால் தந்தையும் தற்கொலைக்கு முயன்றார்.

சேலம்,

சேலத்தில் குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலன், காதலி விஷம் குடித்தனர். மகள் விஷம் குடித்ததை அறிந்த தந்தையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் பள்ளப்பட்டி ராமனேசுவரர் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்து உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் காதலியின் தந்தையிடம் சென்று உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் மறுத்து உள்ளார்.

தங்கள் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பால் விரக்தி அடைந்த சக்திவேல் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே காதலன் விஷம் குடித்த தகவல் கிடைத்ததும் காதலியும் விஷம் குடித்தார். அதே நேரத்தில் மகள் மீது அதிக பாசம் வைத்து இருந்த தந்தையும் மகளின் முடிவால் அதிர்ச்சி அடைந்து விஷம் குடித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் குடும்பத்தினர் எதிர்ப்பால் காதலன், காதலி விஷம் குடித்த சம்பவத்தை அடுத்து, மகள் விஷம் குடித்ததை அறிந்த தந்தையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story