சேலம்: கொண்டலாம்பட்டியில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது


சேலம்: கொண்டலாம்பட்டியில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 13 Sept 2018 4:34 AM IST (Updated: 13 Sept 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கொண்டலாம்பட்டியில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் என்கிற சதீஷ் (வயது 26). பிரபல ரவுடியான இவருக்கும், தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி, அவரது சகோதரர் பெருமாள் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி ரவுடி பிரபாகரன், அவர்கள் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் ரவுடி பிரபாகரனை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ரவுடி பிரபாகரன் மீது கடந்த 2016-ம் ஆண்டு பழனிசாமி என்பவரை கூட்டாளியுடன் சேர்ந்து தாக்கியதாக கொண்டலாம்பட்டி போலீசில் ஒரு வழக்கு, கடந்த ஆண்டு சரவணன் என்பவரை தாக்கி காயப்படுத்தியதாக மல்லூர் போலீசில் ஒரு வழக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தங்கராஜ், தமிழ்மணி ஆகியோரை கூட்டாளியுடன் வந்து தாக்கியதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளன.

பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ரவுடி பிரபாகரன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு கொண்டலாம்பட்டி போலீசார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி தொடர் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த ரவுடி பிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் சங்கர் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடியிடம் போலீசார் வழங்கினர்.

Next Story