தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆயில் என்ஜின்
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆயில் என்ஜின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மைத்துறை மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு தமிழக அரசு செயல்படுத்தும் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ், வேளாண்மை துறையின் கீழ் 290 உழவர் ஆர்வலர் குழுக்களும், 5 உழவர் ஆர்வலர் குழுக்களை ஒன்றிணைத்து 58 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கு டிராக்டர், பவர் டில்லர், ரோட்டோ வேட்டர், களையெடுக்கும் கருவி போன்ற பல வகையான 178 பண்ணை எந்திரங்கள் ரூ.290 லட்சம் தொகுப்பு நிதி மூலம் வழங்கப்பட்டு தற்போது உள்ள பருவத்திற்கு பல்வேறு பண்ணை எந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவைகளின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மைத்துறை சென்னை அலுவலக மண்டல அலுவலர் அசோகன் மானாமதுரை, சிவகங்கை, கல்லல் ஆகிய வட்டாரங்களில் ஆய்வு செய்தார். மேலும் அவர் மானாமதுரை வட்டாரம் விளத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவினரை சந்தித்து ஆய்வு செய்த பின்னர் காளையார்கோவில் வட்டாரம் செங்குளம் கிராமத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை சந்தித்து கலந்துரையாடினார். மேலும் கல்லல் வட்டாரம் மாலைக்கண்டான் கிராமத்தில் செயல்படும் கூட்டுப் பண்ணை குழு விவசாயிகளிடம் இந்த திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் குழுக்களால் பராமரிக்கப்பட்டு வரும் வங்கி கணக்கு விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து திட்ட செயல்பாடுகள் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் சேகர், வேளாண்மை துணை இயக்குனர் (உபரி), சசிகலா, வேளாண்மை துணை இயக்குனர் ஜெயராஜ், வேளாண்மை துணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கு 260 கூட்டுப் பண்ணை உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு குழுக்களுக்கு தொகுப்பு நிதி மூலம் பண்ணை எந்திரங்கள் வாங்கி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட எந்திரங்களை சம்பா பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் தங்கள் பகுதிக்கு தேவையான நெல் விதை மற்றும் களைக் கொல்லியை கூட்டுக் கொள்முதல் செய்யலாம். மேலும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் ஆயில் என்ஜின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story