கோவில்பட்டி, ஆறுமுகநேரி பகுதிகளில் சதுர்த்தி விழா கோலாகலம்: விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு


கோவில்பட்டி, ஆறுமுகநேரி பகுதிகளில் சதுர்த்தி விழா கோலாகலம்: விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 14 Sept 2018 3:00 AM IST (Updated: 13 Sept 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆறுமுகநேரி, 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

ஆறுமுகநேரி

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பில், ஆறுமுகநேரி மெயின் பஜார் செந்தில் விநாயகர் கோவில் முன்பு நேற்று காலையில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் இரவில் வீர விநாயகர் சிலைக்கு ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் அங்கிருந்து வீர விநாயகர் சிலையை வாகனத்தில் ஏற்றி, ஊர்வலமாக மெயின் பஜாருக்கு கொண்டு வந்தனர்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், ஆறுமுகநேரியில் உள்ள 25 அம்மன் கோவில்களின் முன்பு நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சில தெருக்களின் முகப்பிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆறுமுகநேரியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட விநாயகர் கோவில்களில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆறுமுக விநாயகர் கோவில், தெப்பக்குள விநாயகர் கோவிலில் விநாயகர் சப்பர பவனி நடந்தது.

காயல்பட்டினம்

காயல்பட்டினம் சிவன் கோவில், ஓடக்கரை அம்மன் கோவில், பூந்தோட்டம் உள்ளிட்ட 9 இடங்களில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் சட்டமுத்து, சீதாராமன், நகர தலைவர் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர் ராமசாமி, பா.ஜ.க. நகர தலைவர் மகேந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் இருந்து விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி, ஊர்வலமாக எடுத்து சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

உடன்குடி

உடன்குடி, குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 36 இடங்களிலும், இந்து மக்கள் கட்சி சார்பில் 30 இடங்களிலும், அகில பாரத இந்து மகா சபா சார்பில் 15 இடங்களிலும் நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். அகில பாரத இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர். பின்னர் இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி, மாலை 4 மணிக்கு உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, குலசேகரன்பட்டினம் கடலில் விஜர்சனம் செய்கின்றனர். இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளி முன்பு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று, திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் செய்கின்றனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் 13 இடங்களிலும், இந்து முன்னணி சார்பில் 11 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நடந்தது. விழாவில் நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சண்முகவேல், கே.ஆர். கல்லூரி முதல்வர் கண்ணப்பன், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேசுவரன், செயலாளர் சங்கர நாராயணன், தொழில் அதிபர்கள் ராஜூ, கந்தசாமி, ரங்கசாமி, மாரியப்பன், வக்கீல் சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.அருணாசலம் செய்து இருந்தார்.

விநாயகர் சதுர்த்தி விழா

கோவில்பட்டி புதுகிராமம் சக்தி விநாயகர் கோவிலில் 29-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, 6-ம் ஆண்டு வருசாபிஷேக விழா கடந்த 6-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையில் கோவில்பட்டி ரெயில் நிலைய விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கியது. தேச ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலாசார உடைகளை அணிந்த பெண்கள், குழந்தைகள் மாவிளக்கு ஏந்தியும், தீர்த்த குடம், பால்குடம், முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக சென்றனர். பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்த சிறுவர்-சிறுமிகள் ஊர்வலமாக வந்தனர். மெயின் ரோடு வழியாக சென்ற ஊர்வலம், புதுகிராமம் சக்தி விநாயகர் கோவிலை வந்தடைந்தது.

தொடர்ந்து சக்தி விநாயகருக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் விநாயகர் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இல்லத்துபிள்ளைமார் சமூக சங்க தலைவர் சங்கரன், செயலாளர் செல்வம், பொருளாளர் அண்ணாத்துரை, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் முத்துராஜ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவில்பட்டி புதுரோடு, மெயின் ரோடு சந்திப்பு முச்சந்தி விநாயகர் கோவிலில் நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவம், கோவில் தர்மகர்த்தா சண்முகய்யா, கோவில் தலைவர் வேலுச்சாமி, செயலாளர் பெருமாள், பொருளாளர் மாரிமுத்து, செண்பகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story