சிவகாசி அருகே மின்னல் தாக்கி பட்டாசு ஆலை சேதம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று மாலை மின்னல் தாக்கி அந்த ஆலையில் உள்ள மருந்து கலவை அறை தரைமட்டமானது.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி தேன்காலனியில் சிவகாசி ஜவுளிக்கடை வீதியை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் ஆலையை விட்டு வெளியேறி விட்டனர். அப்போது இடி-மின்னலுடன் அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது.
அப்போது திடீரென மின்னல் தாக்கி பட்டாசு ஆலையில் உள்ள மருந்து கலவை அறை தரைமட்டமானது. அறையில் இருந்த வேதிப்பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து மாரனேரி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதே போல் சிவகாசி வேலாயுதம் ரோட்டில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் அலுமினிய பவுடர் அரைக்கும் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்துக்கு மின்னல் காரணம் என்று கூறப்படுகிறது.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் நூர்முகமது என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையை யொட்டி உள்ள பகுதியில் தீப்பெட்டி கழிவுகள் வைக்கும் அறை உள்ளது. இந்த அறையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து ஆலை நிர்வாகம் சார்பில் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story