ரஜினிகாந்த் முதல்-அமைச்சராக வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
ரஜினிகாந்த் முதல்-அமைச்சராக வேண்டும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் பேட்டி
திருவண்ணாமலை,
ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் முதல்-அமைச்சராக வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.
திருவண்ணாமலை முத்துவிநாயகர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு அரசின் அனைத்து நிபந்தனைகளையும் இந்து மக்கள் கட்சி ஏற்கிறது. ஒரு சில இடங்களில் காவல்துறையின் அதிகப்படியான கெடுபிடிகளை மீறி விழா நடத்திய இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ஆன்மிக அரசியல் குறித்து பிரசாரம் செய்யும் விதமாக இன்று (நேற்று) முதல் 108 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளோம். மத்தியில் ஆளும் மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா அரசின் சாதனை குறித்து 1 லட்சம் துண்டுபிரசுரங்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க உள்ளோம்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஆன்மிக அரசியலை முன்னெடுக்கும் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதல்-அமைச்சராக வரவேண்டும். அவர் வந்தால் தமிழகத்தில் பெரும் மாற்றம் ஏற்படும். எங்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் விஜயராஜா கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்க பாடுபடுபவர்.
இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவரை கைது செய்து, அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது. அவரை விடுதலை செய்ய வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி ஆகியோரை சந்தித்து மனு அளித்தேன்.
தாமிரபரணி புஷ்கரணி விழா நடத்த கூடாது, அதற்கு நிதி அளிக்க கூடாது என்று கூறும் அரசியல் கட்சிகளுக்கு எங்களது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நதி தாய்க்கு நாம் விழா எடுத்து நடத்த வேண்டும். எனவே அரசு இந்த விழாவிற்கு நிதி ஒதுக்கி சிறப்பாக நடத்த வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாகும்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் ஓட அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீபத்திருவிழா அன்று மலையேற பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story