விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களிமண் சிலை வாங்குவதில் ஆர்வம் காட்டிய பொதுமக்கள்


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களிமண் சிலை வாங்குவதில் ஆர்வம் காட்டிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 Sep 2018 1:14 AM GMT (Updated: 14 Sep 2018 1:14 AM GMT)

திருவண்ணாமலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பூஜைபொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைக்கு வந்தனர். இதனால் நகர வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. திருவூடல் தெரு, சின்னக்கடை வீதி, பெரிய தெரு, மார்க்கெட் போன்ற முக்கிய இடங்களில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பழங்கள், பூஜைப்பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

மேலும் சாலையோரம் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி சென்று வீடுகளில் பூஜை செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக களிமண்ணால் செய்து பல்வேறு வர்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளை போட்டி, போட்டு கொண்டு வாங்கி சென்றனர். பெற்றோருடன் வந்த குழந்தைகளும் அடம்பிடித்து சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிச் சென்றனர்.

இது மட்டுமின்றி விநாயகர் சிலையை அலங்கரிக்க சாலையோரம் வண்ண அலங்கார குடைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த குடைகளையும் மக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

மேலும் இளைஞர்கள் மற்றும் அமைப்பினர் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அந்தந்த பகுதிகளில் சுமார் 3 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் வைப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டன. அப்பகுதியில் இளைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ந்தனர். சில பகுதிகளில் பகலிலும், சில பகுதிகளில் மாலையிலும் விநாயகர் சிலைகள் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில்களில் உள்ள விநாயகருக்கு அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இங்கும் காலை முதலே பக்தர்கள் வந்து வழிபாடு செய்து சென்றனர்.

பொதுமக்கள் சிறிய வகையிலான சிலைகளுக்கு வீடுகளில் சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு வழிபட்டனர்.

மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை போலீசார் அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, போக்குவரத்துக்கு இடையூறாக கொட்டகைகள் அமைக்க கூடாது என்றும் எச்சரித்தனர்.

பொதுஇடங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் 2 அல்லது 3 நாட்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டு அதன்பின்னர் போலீசார் அறிவித்த தேதியின்படி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.

Next Story