எளிமையின் சின்னம் அண்ணா!


எளிமையின் சின்னம் அண்ணா!
x
தினத்தந்தி 14 Sep 2018 5:20 AM GMT (Updated: 14 Sep 2018 5:20 AM GMT)

நாளை(செப்டம்பர்15-ந் தேதி)அண்ணா பிறந்தநாள்

பேரறிஞர் அண்ணா பார்வைக்கு மிக மிகச் சாதாரணமாகவே தெரிவார். ஆனால் அவர் தம்முள் அடக்கி வைத்திருந்த பேரறிவுப் பெட்டகம் மிகமிகப் பெரியது.இடுப்பில் ஒரு நான்கு முழ வேட்டி, மேலே கைத்தறி வெள்ளைச் சட்டை, தோளில் ஒரு துண்டு. இவ்வளவுதான் அண்ணாவின் உடைகள்! கையில் ஒரு கடிகாரமோ விரலில் ஒரு மோதிரமோ கூட அணிந்ததில்லை. சீவிய தலை கலைந்திருந்தாலும் அதைச் சிறிதும் சட்டை செய்யமாட்டார். சட்டையிலே சில பொத்தான்களைக் கூடச் சரிவரப் பொருத்திக் கொள்ள மாட்டார்.

நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, முதன் முதலில் அவையினுள் நுழைந்தபோது அங்கு வைத்திருந்த வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். பாமரர் போலத் தோற்றமளித்த அண்ணாவைப் பார்த்து அருகில் நின்றிருந்த ஓர் உறுப்பினர் ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார். உடனே அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா? ‘ஏதோ கொஞ்சம் தெரியும்’ என்பதுதான். ஆங்கிலத்தில் கரை கண்ட அண்ணாஅடக்கமாக ஏதோ கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதை அவரும் நம்பியிருப்பார். ஆனால், அண்ணா அவையில் தமது கன்னிப் பேச்சாக உரையாற்றியபோது அனைவரும் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அவையில் அமர்ந்திருந்த பிரதமர் நேரு அண்ணா பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவைத் தலைவராக அமர்ந்திருந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அண்ணா பேச்சை ரசித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.

அண்ணாவுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தும் அண்ணாவின் உரை முடியவில்லை. அண்ணா தொடர்ந்து பேசுவதைத் தடை செய்ய விரும்பாமல் அவையை அரைமணி நேரம் நீடிக்கச் செய்தார் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்திய அண்ணா தமது வாழ்க்கையின் நடைமுறையில் ஆங்கிலத்தைக் கையாளுவதில்லை. ஒரு தமிழரோடு அவர் எவ்வளவு பெரிய படிப்பாளி என்றாலும் அவரிடம்கூடத் தமிழில்தான் பேசுவார். கடந்த 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் அண்ணா காஞ்சீபுரம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குப் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த நேரம் அது. எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் அண்ணாவைப் பற்றித் தரக் குறைவாகச் சுவரில் எழுதி வைத்திருந்தனர். அதனைக் கண்ட கழகத் தோழர்கள் வந்து அண்ணாவிடம் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, அந்தத் தோழர்களிடம்,“அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்து விடாதீர்கள். ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை ஏற்றி அந்தச் சுவர் அருகே வையுங்கள். விளக்கு உபயம் அண்ணாத்துரை என்றும் எழுதி வையுங்கள்” என்றார்.

திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து வேறு புதுக்கட்சி தொடங்கி விட்ட போதிலும் பெரியாரை அண்ணா எதிர்த்தோ , தாழ்த்தியோ பேசியது கிடையாது. ஆனால் பெரியார் அண்ணாவையும், தி.மு.கழகத்தவரையும் மிகவும் தாக்கிப் பேசுவார். தி.மு.க.வினரைக் “கண்ணீர்த்துளிகள்” என்றே குறிப்பிடுவார். பெரியார் என்ன திட்டினாலும் அண்ணா பொறுமை இழப்பதில்லை. மறுத்தோ வெறுத்தோ பேசியதுமில்லை .தோழர்கள் வந்து அண்ணாவிடம், “பெரியார் உங்களைப்பற்றி மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசுகிறாரே, அவருக்குப் பதில் சொல்ல வேண்டாமா அண்ணா ?” என்று கேட்கிறார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? “காட்டில் யானை இருக்கிறதே அது என்ன செய்யும் தெரியுமா? தனது குட்டியைப் புரட்டிப் போட்டுத் தாக்கும். தும்பிக்கையால் வளைத்து இழுத்து, மரத்தில் மோதும். ஏன் இப்படிச் செய்கிறது தெரியுமா? தன்னை மனிதரோ மிருகங்களோ தாக்க வந்தால், திருப்பித் தாக்கவும், தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவும் தனது குட்டியைப் பழக்குவதற்குத்தான் தாய் யானை அப்படிச் செய்யும்.அதைப்போல், பெரியாருக்கு நம்மீது கோபம் இல்லை. எதிரிகள் நம்மீது தாக்கினால் தாங்குவதற்கும் எதிர்த்துத் தாக்குவதற்கும் நம்மைப் பழக்குகிறார் என்பதுதான் உண்மை . அதனால் நம்மவர் யாரும் பெரியாருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.இது தான் அண்ணாவின் விளக்கம்.அண்ணாவிடம் தான் என்ற செருக்கோ, தன்னலமோ, பகட்டோ காண முடியாது.

அவருடைய எளிமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சி. கவிவேந்தர் கா.வேழவேந்தருக்கு அண்ணா தலைமையில் திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளும் வந்தது. மணப்பந்தலில் நூற்றுக்கணக்கானவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. அண்ணா வந்து சேராததே காரணம்.மணப்பந்தலை நோக்கி ஒரு லாரி வந்து நிற்கிறது. அதிலிருந்து மெதுவாக இறங்கி வருகிறார் அண்ணா . எல்லோருக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சி இன்னொரு பக்கம் வியப்பு. அண்ணா காஞ்சீபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு சென்னை வரும்போது வழியில் கார் பழுதாகிவிட்டது. அந்த இடத்தில் உடனடியாகப் பழுதுபார்ப்பதற்கான வசதி கிடையாது. எப்படியும் வேழவேந்தன் திருமணத்திற்குச் சென்றாக வேண்டும். என்ன செய்வது? என்று அண்ணா யோசித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பக்கமாக ஒரு லாரி காலியாக வந்து கொண்டிருத்து. அது சென்னைக்குத்தான் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி அண்ணா அவர்கள் அதில் ஏறிக் கொண்டார்கள். அண்ணாவின் நிலை அறிந்த லாரி ஓட்டுநர் லாரியை மிக வேகமாகச் செலுத்தியதால் விரைந்து சென்னை வந்தடைந்தது. வேழவேந்தன் திருமணமும் தடையின்றி நடைபெற்றது.இப்படி ஒரு தலைவரைப் பார்க்க முடியுமா?

சா.கணேசன் மேயராக இருந்த போது அவரும் நானும் அண்ணாவைச் சந்திக்கச் சென்றோம். நுங்கம்பாக்கம் வீட்டின் மாடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். எதிரே நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய இருக்கை (பெஞ்சு) ஒன்றிருந்தது. நாங்கள் நின்றுகொண்டே அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தோம். அண்ணா அவர்கள் எங்களைப் பார்த்து “உட்காருங்கள்” என்று சொல்லி எதிரே இருந்த இருக்கையைக் காட்டினார்.அண்ணாவுக்கு எதிரே சரிக்குச் சமமாக உட்கார நாங்கள் விரும்பவில்லை. “பரவாயில்லை அண்ணா, நின்று கொண்டே பேசிவிட்டுச் செல்கிறோம்” என்று சொன்னோம். பிடிவாதமாக உட்காரச் சொல்லியும் நாங்கள் உட்காரவில்லை. அந்த நேரத்தில் மாடிப்படியில் ஏறி ஒருவர் மாடிக்கு வந்தார். அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திண்டிவனம் ஆ. தங்கவேலு. அவர் பின்னால் சில தோழர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் அண்ணா “குடுகுடு”என்று பக்கத்தில் இருந்த அறையில் நுழைந்து ஒரு பெரிய சமக்காளத்தை எடுத்து வந்து விரிக்க முனைந்தார். உடனே நான் “என்னிடம் கொடுங்கள் அண்ணா நான் விரிக்கிறேன்” என்றேன். கொடுக்க மறுத்துவிட்டுத் தாமே விரித்து, “இதில் எல்லாருமா உட்காருங்கள்” என்றார். தொண்டருக்கும் தொண்டராய் இப்படி எந்தத் தலைவராவது இயங்கியது உண்டா?

- கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

Next Story