ரபேல் விமான ஒப்பந்த ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க வேண்டும்
ரபேல் விமான ஒப்பந்த ஊழல் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் கூறினார்.
கோவை,
ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்றுக்காலை கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் வரவேற்று பேசினார். கோவை வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாநில துணை தலைவர் எம்.என்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக் பேசியதாவது:–
பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசிற்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் லாபம் கிடைத்துள்ளது. இது மக்களிடம் இருந்து சுரண்டப்பட்டுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. புதிதாக தொடங்கப் பட்ட 10 நாட்களே ஆன தனியார் நிறுவனத்திற்கு விமான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் முரண்பாடான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
பிரதமர் நரேந்திரமோடி கையில் நாடு பாதுகாப்பாக இல்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ரபேல் விமானம் வாங்குவதற்காக உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இறுதியில் டெசால்ட் என்ற பிரான்சு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட் டது. 126 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒவ்வொரு விமானத்தின் விலையும் ரூ.526 கோடியாகும்.
ஆனால் நரேந்திர மோடி பிரதமரானதும் பிரான்சுக்கு 126 விமானங்களை வாங்குவதற்கு பதில் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டார். ஒரு விமானத்தை ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு பதில் ரூ.1,670 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம் மூலம் ரபேல் விமானங்கள் வாங்க ரூ.19 ஆயிரம் கோடி போதும். ஆனால் நரேந்திரமோடி போட்ட ஒப்பந்தம் மூலம் வாங்க வேண்டும் என்றால் ரூ.60 ஆயிரம் கோடி வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியில் போட்ட ஒப்பந்தத்தை விட தற்போது ரூ.41 ஆயிரம் கோடி அதிகமாக கொடுக்க வேண்டியது உள்ளதால் இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஆனால் இதுவரை ஒரு விமானம் கூட இந்தியா வரவில்லை. இதன் மூலம் இந்திய விமானப்படைக்கு போதுமான விமானங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் வகையில் விசாரிக்க பாராளுமன்ற கூட்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். அந்த கமிட்டி இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் விசாரிக்கும். மத்திய அமைச்சரவை அனுமதியின்றி இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் எப்படி கையெழுத்திட்டார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் பேசியதாவது:–
கடந்த 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது நரேந்திரமோடி அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் நிறைவேற்ற வில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியர்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக அறிவித்தார். இங்கு யாருடைய வங்கி கணக்கிலாவது அவர் பணத்தை போட்டாரா?. அவர் கூறியபடி விலைவாசி குறைந்துள்ளதா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நரேந்திர மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். எனவே பா.ஜனதாவை தோற்கடித்து மத்தியில் ராகுல் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். இதற்காக நாம் வருகிற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:–
ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் நடப்பது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி. இதனால் அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய மோடி பதவி விலக வேண்டும். பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசால் மட்டும் தான் முடியும். மோடிக்கு மாற்று ராகுல் தான். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவை அண்ணா சிலையில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் முகுல்வாஸ்னிக், சஞ்சய் தத், திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் நடந்து வந்தனர். ஊர்வலம் தெற்கு தாசில்தார் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொண்டர்கள் விமான வடிவிலான பலூன்கள் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடனும் கலந்து கொண்டனர்.
ஒரு வேன் மீது ரபேல் விமானம் போன்று பெரிய அளவில் பொம்மையை செய்து காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து வந்திருந்தனர்.
ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.சரவணக்குமார், மாநில செயலாளர் வீனஸ்மணி, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில துணை தலைவர் எஸ்.கவிதா, மகேஷ்குமார், ஏ.ஆர்.சின்னையன், ராம்கி, கணபதி சிவக்குமார், சவுந்திரகுமார், கோவை செல்வம், வக்கீல் கருப்பசாமி, சின்னராஜ், விஜயகுமார், நவீன்குமார், கே.ஏ.கருப்பசாமி, காலனி வெங்கடாசலம், கோவை போஸ், குனிசை செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.