ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 960 கனஅடி வீதம் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணை கடந்த மாதம் முழுகொள்ளளவை எட்டியதையடுத்து, மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து ஆற்று வழியாக 18 நாட்களில் மொத்தம் 1,560 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து முதற்கட்டமாக சிவகங்கை மாவட்டத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று முன்தினம் இரவு மதுரையை கடந்து சிவகங்கை மாவட்ட எல்லைக்கு சென்றது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மதுரை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 1,900 கனஅடி, மதுரை மாநகர குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 60 கனஅடி என மொத்தம் 4,960 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி அணையில் இருந்து கிட்டத்தட்ட வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வைகை ஆற்றின் இடது, வலது கரைகளை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பாலத்தின் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது திறக்கப்படும் தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்தை எட்டியவுடன் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.16 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 1,482 அடியாகவும், நீர்இருப்பு 4,664 மில்லியன் கனஅடியாக இருந்தது.
Related Tags :
Next Story