ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடந்தது


ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 14 Sep 2018 10:00 PM GMT (Updated: 14 Sep 2018 6:37 PM GMT)

ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய அரசின் ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்து சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட தலைவர்கள் சி.எஸ்.முரளிதரன் (மாநகரம்), ஜெயக்குமார் (தெற்கு), சீனிவாசன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், ரபேல் விமான ஒப்பந்த ஊழலை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பேசியதாவது:-

ஊழல்

ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் செய்து விட்டு, எதுவும் தெரியாதது போன்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் அழுத்தமான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார். ஆனால் அதற்கு மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ரபேல் விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதே விமானம், அதே தொழில்நுட்பத்தில் தற்போது ரூ.1,680 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 3 மடங்கு அதிக விலை கொடுத்து விமானத்தை வாங்குகிறார்கள்.

இந்த விமானத்தை பராமரிக்க காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தற்போது அம்பானி, அதானி போன்ற தனியார் முதலாளிகள் பயன்பெறும் வகையில் 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்துக்கு பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஊழல் விவரங்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் வட்டாரம், கிராமம் வரை சென்றடைய வேண்டும்.

பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1988-ம் ஆண்டு பெட்ரோல் விலை 2 ரூபாய் உயர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு குதிரைவண்டியில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்த வேண்டும்.

ஸ்ரீவைகுண்டத்தில் 60 ஆண்டுகளாக வசித்து வரும் 150 குடும்பத்தினரை காலி செய்வதற்கான முயற்சியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. நாங்கள் அந்த வீடுகளை காப்பாற்றி கொடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story