கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
கோவை அருகே சுண்ணாம்பு காளவாய் பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த எந்திரங்கள், மொபட் எரிந்து நாசமானது.
கோவை,
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் முகமது அலி (வயது 55). இவருக்கு கோவை–பாலக்காடு ரோடு சுண்ணாம்பு காளவாய் பெரியசாமி வீதியில் சொந்த கட்டிடம் உள்ளது. அதில், குனியமுத்தூர் கங்கா நகரை சேர்ந்த முகமதுஷாகீத் (42) என்பவர் பிளாஸ்டிக் குடோனும், உக்கடம் பிலால் நகரை சேர்ந்த முகமது இப்ராகீம் (37) என்பவர் சோபா தயாரிக்கும் கடையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பிளாஸ்டிக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ மளமளவென்று அனைத்து பகுதிகளுக்கும் பரவி எரிய தொடங்கியது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தீ அருகில் இருந்த சோபா தயாரிக்கும் கடைக்கும் பரவியது.
உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் உடனே கட்டுப்படுத்த முடிய வில்லை. தீயின் வெப்பம் தாங்காமல் மேற்கூரையும் எரிந்து அப்படியே கீழே விழுந்தது.
இதனால் கூடுதலாக 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால் அதிகாலை 4.30 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் இருந்த எந்திரங்கள், ஒரு மொபட், சோபாக்கள் ஆகியவை எரிந்து நாசமாகின. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மின்கசிவு காரணமாக பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படு கிறது. இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்ட பிளாஸ்டிக் குடோனை சுற்றிலும் வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை ஓட்டு வீடுகள் என்பதால் தீ பரவி விடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருந்தோம். தீ முற்றிலும் அணைக்கப் பட்ட பிறகே நிம்மதி அடைந்தோம். பிளாஸ்டிக் குடோனை ஒட்டி மர வேலைகள் செய்யும் கடை உள்ளன. அங்கும் தீ பரவி இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும் என்றனர்.