2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 14 Sep 2018 10:15 PM GMT (Updated: 14 Sep 2018 7:06 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே உள்ள மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வாளர் சுகவனமுருகன் ஆகியோர் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் தமிழ்செல்வன், ரவி, சீனிவாசன், விஜயகுமார், மதிவாணன், பிரகாஷ், செல்வகுமார், காவேரி, ரமேஷ், பாலாஜி, கணேசன் மற்றும் மனோகரன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே உள்ள தாளப்பள்ளி பெருமாளப்பன் மலைக்கு களப்பயணம் மேற்கொண்டனர். இந்த களப்பயணத்தின் போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கூடி நடனமாடும் பாறை ஓவியம் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தாளப்பள்ளி பெருமாளப்பன் மலையில் வராற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மலையில் இதற்கு முன்பு 6 இடங்களில் பாறை ஓவியங்கள் இருந்ததை கண்டுபிடித்தோம். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியம் ஏழாவது ஆகும். இது மலை மீது சுமார் 600 அடி உயரத்தில் உள்ள பெருமாள் கோவிலின் பின்புறம் இருக்கும் கண் போன்ற சுனையின் வடக்கு பகுதியில் உள்ள பாறையின் மீது கவிழ்த்து வைக்கப்பட்டது போல் உள்ள பாறையின் கீழ் பகுதியில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

இதில் 4 பேர் கைகோர்த்து நடனமாடுவது போல் உள்ளது. இருவர் மேற்கு நோக்கியும், இருவர் கிழக்கு நோக்கியும் உள்ளது போல் இந்த ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. பாறையின் மேற்கு பகுதியில் ஒரு வீரன் கேடயத்தோடு வாள் வைத்து போரிடுவது போல் வெண்சாந்து ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவன் இடையில் ஓரு வாள் கச்சை இருப்பதும் தெளிவாக வரையப்பட்டுள்ளது. அவனுக்கு எதிரே ஒரு வீரன் போரிடுவது பாறையின் அடுக்கு அரிக்கப்பட்டு மறைந்து இருக்கலாம்.

மேலும் இரண்டு ஆங்கில எழுத்தான “வி“ வடிவ குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. மலையின் அடிவாரத்தில் உள்ள மண்டுமாரியம்மன் கோவில் நிலத்தருகே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகளின் துண்டுகளும், சுடுமண் சிலை சிதில்களும் கிடைத்துள்ளது. அருகே 3 நடுகற்கள் உள்ளது. எனவே, இந்த ஓவியம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியம் என இதில் இருந்து தெளிவாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story