வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் மோசடி, 3 பேர் கைது


வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் மோசடி, 3 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2018 3:15 AM IST (Updated: 15 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடு வாழ் தமிழரிடம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு வங்கி மேலாளாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை,

ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் பாஸ்கர்(வயது 56). மதுரையை பூர்விகமாக கொண்ட இவர் அந்த நாட்டில் தொழில் செய்து வருகிறார். மேலும் அவர் மதுரை காளவாசலில் உள்ள அரசு வங்கியில் கணக்கு வைத்திருந்தார். அப்போது அவரது கணக்கில் பல கோடி ரூபாய் இருப்பதை அந்த வங்கி மேலாளர் அறிந்தார்.

எனவே அந்த வங்கியின் மேலாளர் நல்லபெருமாள் வெளிநாட்டில் உள்ள ராஜமாணிக்கம் பாஸ்கரை தொடர்பு கொண்டு மானகிரி பகுதியில் நிலம் ஒன்று விலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த நிலத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால் உடனே அதனை விலைக்கு வாங்கி கொள்ளுமாறு அவரிடம் கூறியுள்ளார். எனவே அவர் அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தார்.

இதற்கிடையில் நிலத்தை பதிவு செய்வதற்கு ராஜமாணிக்கம் பாஸ்கரிடம் உங்களுடைய கையெழுத்து போட்ட காசோலை ஒன்றை அனுப்புமாறு வங்கி மேலாளர் கேட்டுள்ளார். அவரும் அதன்படி கையெழுத்து போட்ட காசோலையை அனுப்பியுள்ளார். அதனை பயன்படுத்தி நல்லபெருமாள் மற்றும் மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி பராசத்தி, மகன் பாலாஜி வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து 1 கோடியே 59 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை அவரது வங்கியில் இருந்து எடுத்து கொண்டனர். இதற்கிடையில் பணத்தை மோசடி செய்து எடுத்தது ராஜமாணிக்கம் பாஸ்கருக்கு தெரியவந்தது.

உடனே அவர் மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மீனாட்சி சுந்தரம், அவரது மனைவி, மகனை கைது செய்தனர். இதற்கிடையில் வங்கி மேலாளர் நல்லபெருமாள் பதவி உயர்வு பெற்று வெளிமாநிலத்திற்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story